Published : 05 Mar 2020 02:50 PM
Last Updated : 05 Mar 2020 02:50 PM
ரஜினிகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான தேதியை மாவட்டச் செயலாளர்களிடம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் என ரஜினி பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தின் இரண்டு பெரிய ஆளுமைகளான திமுக தலைவர் கருணாநிதியின் ஓய்வு, ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி கட்சியைத் தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். 1996-ம் ஆண்டு அரசியலில் வாய்ஸ் கொடுத்த ரஜினி அதற்கு பிறகு, 2017-ம் ஆண்டின் இறுதியில் அரசியலுக்கு வருவது குறித்து அறிவித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் பேசிய ரஜினி, இருபெரும் ஆளுமைகள் இல்லை, தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை நான் நிரப்புவேன். தமிழகத்தில் என் தலைமையில் எம்ஜிஆர் ஆட்சியைக் கொண்டுவருவேன் என்று பேசினார். பின்னர் ரஜினி மக்கள் மன்றம் அமைக்கப்பட்டது. ஆன்மிக அரசியல்தான் என் அரசியல் என ரஜினி பிரகடனப்படுத்த, அது சர்ச்சையானது.
ரஜினி அளித்த சில பேட்டிகள் அவர் பாஜக ஆதரவாளர் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது. அதற்கு ஏற்றார்போல் பாஜக தலைவர்களிடம் ரஜினி நெருக்கம் காட்டியதும் ஒரு காரணமாகக் கூறப்பட்டது. சிஏஏ குறித்து ரஜினி அளித்த பேட்டி மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினி மீது பாஜக நிழல் படிவதை மாற்ற, சிஏஏவினால் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் நான் முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன் எனப் பேட்டி அளித்தார்.
பின்னர் டெல்லி கலவரத்தைக் கடுமையாகக் கண்டித்த ரஜினி, உளவுத்துறை தோல்வி என நேரடியாகச் சொல்லி அடக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் என்று பேட்டி அளித்தார். திடீரென உலமாக்கள் சபை குருமார்களைப் பேச்சுவார்த்தைக்கு ரஜினி அழைத்தார். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் மூலம் ரஜினி தன்னை மாற்றிக்கொள்கிறார் என்கிற எண்ணம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பலரும் வெளிப்படையாக ரஜினியிடம் இதுகுறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. நாம் தனித்து நிற்போம் என நீங்கள் சொன்னீர்கள். நமக்கு எந்த அடையாளமும் வேண்டாம். நீங்கள் நீங்களாக வாருங்கள். நாம் நடுநிலை அரசியலைக் கையிலெடுப்போம் என பெரும்பாலானோர் கூறியுள்ளனராம்.
சிஏஏ உள்ளிட்ட விவகாரங்களில் உங்கள் மீது வேறு கறையைப் பூச எதிர்க்கட்சிகள் முயல்வதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. நாம் எதையும் ஆதரித்துப் பேச வேண்டாம் என்றும் சில மாவட்டச் செயலாளர்கள் பேசினார்கள் என்று கூறப்படுகிறது. இதை ரஜினியும் ஆமோதித்தாராம். ஆனால், மொத்தமாக இதுபோன்ற கருத்து வந்ததை ரஜினி எதிர்பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதவிர ரஜினி ஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயத்தைக் கடுமையாக எதிர்பார்க்கிறார்.
சினிமாவோ, வாழ்க்கையோ அதில் கச்சிதம் நிச்சயமாக இருக்க வேண்டும் என்று விரும்பும் ரஜினி, சினிமா தொடங்குவதற்கு முன்னரே திட்டமிட்டு அனைத்தையும் முடித்தபின்தான் படபிடிப்புத் தளத்திலேயே கால் வைப்பார். ஆனால் கட்சி விவகாரத்தில் வார்டுதோறும் உறுப்பினர் சேர்க்கை, வட்டவாரியாக கட்சியைப் பலப்படுத்துவது, ஆட்களைக் கண்டெடுக்கும் பணியைச் செய்வது உள்ளிட்ட பணிகளை பல மாவட்டச் செயலாளர்கள் இன்னும் முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கட்சி ஆரம்பித்தாலும் ஸ்தாபன ரீதியாக வலுவாகக் கொண்டு செல்ல இது தடையாக இருக்கும் என்பதால் இந்த விஷயத்திலும் ரஜினி ஏமாற்றம் அடைந்ததாகத் தெரிகிறது. இதைத்தான் தனிப்பட்ட முறையில் ஏமாற்றமடைந்ததாக ரஜினி குறிப்பிட்டு, அதுகுறித்து பின்னர் சொல்கிறேன் என்று பேட்டி அளித்ததாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
இவற்றைக் களைய விரைவில் பல மாற்றங்களை ரஜினி கொண்டுவர உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT