Published : 05 Mar 2020 12:19 PM
Last Updated : 05 Mar 2020 12:19 PM

விடுதலைப் புலிகளுக்கு தமிழ் கற்றுக்கொடுத்த பேராசிரியர் அறிவரசன் மறைவு: ராமதாஸ் இரங்கல்

பேராசிரியர் அறிவரசன் - ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தமிழ் வகுப்பு எடுத்த தமிழகப் பேராசிரியர் அறிவரசன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று (மார்ச் 5) வெளியிட்ட இரங்கல் செய்தியில், "திருநெல்வேலி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியரும், ஈழப் போராளிகளுக்குத் தமிழ் கற்றுத் தந்தவருமான பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி முதுமை காரணமாக அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற அவர், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று ஈழத்திற்குச் சென்று அங்குள்ள தமிழர்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் கற்றுக் கொடுத்தார். அதன்பிறகும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களில் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்து தமிழாசிரியர்களாக உருவாக்கினார்.

தமிழ் மற்றும் தமிழர் நலன் குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். வாழ்நாள் முழுவதும் தமிழ்க் கொடை அளித்த அவர், இறப்புக்குப் பிறகு தமது உடலையும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பாமக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x