Published : 31 Aug 2015 02:56 PM
Last Updated : 31 Aug 2015 02:56 PM

100 ஆண்டு பழமையான அமெரிக்கன் கல்லூரி நூலகம்: 2016-ம் ஆண்டில் பிரம்மாண்ட விழா நடத்த ஏற்பாடு

மதுரையில் உள்ள 135 ஆண்டுகள் பழமையான அமெரிக்கன் கல்லூரி எண்ணிலடங்கா சாதனைகளை உள்ளடக்கியது. இங்கு 1915 ஜூன் 28-ல் நூலகம் செயல்பட தொடங்கியது. முதல் நூலகராகப் பணியாற்றியவர் ஜெ.ஏ.சவுண்டர்ஸ். ஓராண்டி லேயே 5 ஆயிரம் நூல்கள் சேர்ந்தன. முனைவர் டேனியல் பூரின் பேத்தி சாமுவேல் ஏ.மோரன் இங்கு நூலகம் கட்ட 25 ஆயிரம் டாலர்களை வழங்கினார். இதனால் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட புதிய நூலகக் கட்டிடம் டேனியல் பூர் பெயரில் 1933-ல் திறக்கப்பட்டது. படிப்படியாக விரி வடைந்த நூலகத்தில் 2014-ல் இணையதள சேவை வசதியும் வழங்கப்பட்டது.

இந்த நூலகத்தில் முதலாவது இந்திய நூலகர் என்ற பெருமைக் குரியவரான ஏ.ஜி.சாலமன் 1940-ம் ஆண்டுமுதல் 29 ஆண்டுகள் டேனியல்பூர் நூலகத்தில் பணியாற்றியுள்ளார். தற்போது 12-வது நூலகராக என்.வசந்தகுமார் பணியாற்றுகிறார்.

ஏராளமான வசதிகள்

யுனெஸ்கோ அமைப்பால் உருவாக்கப்பட்ட நூல்களை தேடுவதற்கான சிடிஎஸ்-ஐஎஸ்ஐஸ் என்ற மென்பொருள் இந்த நூலகத்தில் 1985 முதல் பயன்படுத்தப்படுகிறது. எளிதாக நூல்களைத் தேடுவது உட்பட பல வசதிகளை இந்த மென்பொருள் வழங்குகிறது. மேலும் வைபை இணையதள சேவை, கண்காணிப்பு கேமரா, இலவச இணைய தளம், நகல் எடுக்கும் வசதி, வேலைவாய்ப்பு மையம் என பல்வேறு வசதிகள் நூலகத்தில் செய்யப்பட்டுள்ளன. இந்த நூலகத்துடன் இணைந்து, கல்லூரியிலுள்ள 33 துறைகளிலும் தனியாக நூலகங்கள் செயல் படுகின்றன.

காட்சிக்கூடம்

நூலகமாக மட்டுமின்றி அரிதான பொருட்கள் அடங்கிய காட்சிக் கூடமாகவும் காட்சியளிக்கிறது. சீவக சிந்தாமணி, திருப்புகழ், எண்சுவடி, கதிர்காம மாலை, முருகன் பாட்டு, அம்மன் கதை என அரிதான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. கி.பி.1500-ம் ஆண்டுகள் முதல் பயன்படுத்தப்பட்ட பல அரிய போர்க்கருவிகள், மன்னர்களுக்கு தகவல் அளிக்கும் பலகைகள், தலைக்கவசங்கள், மரச்சட்டங்கள், ரூபாய் நோட்டுகள், காசுகள் என ஏராளமான பொருட்கள் உள்ளன. மேலும் 1720-ம் ஆண்டு ஹீப்ரு மொழியில் வெளியான பைபிள் மற்றும் பழைய மகாபாரதம் என மிக அரிதான நூல்கள் உள்ளன.

முக்கிய விருந்தினர்கள்

இந்த நூலகத்துக்கு ரவீந்திர நாத் தாகூர், ராக்பெல்லர், சீனாவை சேர்ந்த கூ.சாங்காய், இந்திய நூலகத் தந்தை ரங்கநாதன், முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, இயற்பியல் நோபல் பரிசு பெற்ற மில்லிகன் உள்ளிட்ட ஏராளமானோர் நூலகத்தை பார்வையிட்டு பாராட்டு குறிப்பு களை பதிவு செய்துள்ளனர்.

தேசிய அளவில் 5-ம் இடம்

மத்திய அரசால் கல்லூரிக ளுக்காக வழங்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ள மின்தகவல்கள் திட்டத்தில் இந்த நூலகம் இணைக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் 6 ஆயிரம் பருவ இதழ்கள், 97 ஆயிரம் இணையதள புத்தகங்கள் மின்மயமாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் இந்த சேவையை பயன்படுத்தும் 4,721 கல்லூரிகளில் அமெரிக்கன் கல்லூரி 5-ம் இடத்தை பெற்றுள்ளது.

நூலகர் வசந்தகுமார் கூறுகையில், ‘முறையான பராமரிப்பு, சிறந்த சேவை மூலம் நூலகத்துக்கு வரும் மாணவர் களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுகிறோம் என்றார்.

ஜனவரி 8, 9-ல் நூற்றாண்டு விழா

கல்லூரி முதல்வர் ம.தவமணி கிறிஸ்டோபர் கூறியது: இந்த நூலகம் மூலம் மாணவர்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டை அளிக் கிறோம். காலத்துக்கேற்ப நவீனமயமாக்கியுள்ளோம். பகுதி நேரமாக நூலகத்தில் பணியாற்றும் வாய்ப்பும் மாணவர் களுக்கு வழங்குகிறோம். இந்த நூலகத்தின் நூற்றாண்டு விழாவை 2016 ஜனவரி 8, 9 ஆகிய நாட்களில் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளோம். இதில் அமெரிக்கன் குழும கல்லூரி அறங்காவலர் தலைவர் ரிச்சர்டு ரீஸ், யுனைடெட் போர்டு தலைவர் நான்சி சோப்மேன், யூனியன் கிறிஸ்தவ கல்லூரிகளின் தலைவர் தீனபந்து ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். வரும் ஜனவரி 10 முதல் 31 வரை நூலகத்தை பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம்.

நூலகத்தில்...

புத்தகங்கள் 1,50,107, பாடப்புத்தகங்கள் 75,384, பார்வை நூல்கள் 2,019, அரிய புத்தகங்கள் 1,405, பாட இதழ்கள் 40, பருவஇதழ்கள் 36, பிரைலி புத்தகங்கள்12, ஓலைச்சுவடிகள் 1,260, ஆய்வு இதழ்கள் 336.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x