Published : 05 Mar 2020 11:34 AM
Last Updated : 05 Mar 2020 11:34 AM
கரோனா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம் எனவும், நிதானம், விழிப்புணர்வு தான் வேண்டும் எனவும், பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (மார்ச் 5) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் கரோனா வைரஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து மக்களிடம் ஒரு விதமான அச்சம் ஏற்பட்டிருக்கிறது. கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்தால் கரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்கலாம் என்பதால், இது குறித்த கவலை தேவையில்லை.
சீனாவை மட்டுமே பெருமளவில் அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ், இப்போது தென்கொரியாவில் வேகமாக பரவி வருகிறது. ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் 93 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக சீனாவில் 80 ஆயிரத்து 270 பேரும், தென்கொரியாவில் 5,328 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பிற நாடுகளில் 8 ஆயிரம் பேர் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியான 3,190 பேரில் 2,981 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட கண்டங்களில் கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவில் அச்சப்படும் அளவுக்குத் தாக்கம் இல்லை. அதே நேரத்தில் உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை, மிக அதிக மக்கள் அடர்த்தி, திருவிழாக்கள், மாநாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கூட்டம் கூடும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் இந்தியா மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் இதுவரை கரோனா வைரசால் தாக்கப்பட்டவர்கள் 28 பேர் என்றாலும், அவர்களில் 16 பேர் இத்தாலிய சுற்றுப்பயணிகள் ஆவர். விமான நிலையங்களில் முறையாக மருத்துவ ஆய்வு செய்யப்பட்டிருந்தால், இத்தாலிய பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை தடுத்திருக்கலாம். இத்தாலியில் இருந்து ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்தவர்களில் ஒருவருக்கு மட்டுமே கரோனா வைரஸ் தாக்கம் இருந்துள்ளது. ஆனால், அதை விமான நிலையத்தில் கண்டுபிடித்து அவரை தனிமைப்படுத்தாதன் விளைவாகவே, அவருடன் சென்ற மேலும் 15 இத்தாலிய பயணிகளுக்கும், அவர்களின் வாகனத்தை ஓட்டிச் சென்ற இந்திய ஓட்டுநருக்கும் கரோனா வைரஸ் தாக்குதலால் கோவிட் -19 நோய் ஏற்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் மருத்துவ ஆய்வு முழுமையாக மேற்கொள்ளப்பட்டால் கரோனா தொற்றை தடுத்து விடலாம் என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. எனவே, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் கரோனா பாதிப்பை கண்டறிவதற்கான மருத்துவ ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து சுற்றுலா தலங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
கரோனா வைரஸை கண்டு அஞ்சத் தேவையில்லை. இதுவும் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் தான். ஆனால், கரோனா வைரஸ்கள் சார்ஸ், மெர்ஸ் போன்ற வைரஸ்களைப் போன்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றுபவை என்பதால் இவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். காய்ச்சல், சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.
கரோனா வைரஸ் தாக்கிய பிறகு 2 முதல் 14 நாட்களில் அறிகுறிகள் தென்படக்கூடும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் கூடுமானவரை தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இதற்காக தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ள வார்டுகளில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் எந்த பயனும் இல்லை என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
கடந்த காலங்களில் உலகை அச்சுறுத்திய பிற வைரஸ் காய்ச்சல்களுடன் ஒப்பிடும்போது கரோனா வைரஸ் காய்ச்சல் சற்று கடுமையானது என்றாலும்கூட, உயிரைக் காப்பாற்ற முடியாதது அல்ல. சீனாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 80 ஆயிரம் பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது 44 ஆயிரம் பேர் முழுமையாக உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களிலும் 99 விழுக்காட்டினரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில் கூட நேற்று முன்தினம் வரை 6 பேர் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் கேரளத்தைச் சேர்ந்த மூவர் முழுமையாக தேறி, பணிக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர். கரோனா இறப்பு விகிதம் 2% மட்டும் தான் என்பதாலும், அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதால், இந்த நோய் தாக்கியவர்கள் அச்சப்படவோ, கவலைப்படவோத் தேவையில்லை.
சீனாவிலும், பிற நாடுகளிலும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த 3,190 பேருமே ஏற்கெனவே உடல் வலிமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லாமல் இருந்தவர்கள் தான். எனவே, கரோனா பாதிப்பை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இந்த நோய் மனிதர்கள் மூலம் பரவுகிறது என்பதால் சுற்றுலாத் தலங்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்காது என்பதால், பிறந்தநாள் விழா போன்ற கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும். புதிய மனிதர்களுடன் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் உணவுக்கு முன்பும், பிறகும் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுவதை அனைவரும் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.
கரோனா வைரஸ் தாக்குதல் குறித்த மிகைப்படுத்தப்பட்ட தகவல்களாலும், வதந்திகளாலும் தமிழக மக்களிடம் ஒரு வித அச்சம் நிலவுகிறது. கரோனா வைரஸை தவிர்த்தல் மற்றும் நோய்த் தொற்றினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பொதுவான மருத்துவ அறிவுரைகள் ஆகியவற்றை வழங்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அச்சத்தை போக்க வேண்டும்.
11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிகளுக்காக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுரைகளை அனைத்து பள்ளிகளும் முழுமையாக கடைபிடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT