Published : 05 Mar 2020 10:05 AM
Last Updated : 05 Mar 2020 10:05 AM
வேதகிரீஸ்வரர் கோயில் பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட விடுதி பராமரிப்பின்றி உள்ள நிலையில், அது மது அருந்தும் வளாகமாக மாறியுள்ளதால், சுற்றுச்சுவர் அமைத்து சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். ஆனால், வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்கிச் செல்வதற்காக, கடந்த 2008-ம் ஆண்டு தன்னிறைவு திட்டத்தில், மலைக்கோயில் கிரிவலப் பாதையில் 8 அறைகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. ஆனால், விடுதியை கோயில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், சில மாதங்களிலேயே விடுதி அறையில் குடிநீர் குழாய், கழிப்பறை போன்றவை சேதமடைந்து பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், விடுதி வளாகத்தை சமூக விரோதிகள் மது அருந்தும் கூடமாக பயன்படுத்துகின்றனர். மேலும், திருக்கழுக்குன்றம் போலீஸார், விபத்து மற்றும் கடத்தல் சம்பவங்களில் பறிமுதல் செய்யும் வாகனங்களை விடுதியைச் சுற்றி நிறுத்தியுள்ளதாலும், முட்புதர் மண்டியுள்ளதாலும் அப்பகுதியில் பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக, உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இவற்றை சீரமைத்து, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, உள்ளூர் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கூறும்போது, "விடுதி அறைகளில் மின்சாரம், குடிநீர் குழாய், படுக்கைகள் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் முட்புதர்கள் மண்டி சிதிலமடைந்து காணப்படுகிறது. விடுதி வளாகத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்து, காவலரை நியமித்தால் மீண்டும் பக்தர்கள் தங்குவார்கள். இதன்மூலம், கோயில் நிர்வாகத்துக்கும் வருவாய் கிடைக்கும். கிரிவலப் பாதையில் பக்தர்களும் அச்சமின்றி செல்லும் நிலை ஏற்படும்" என்றனர்.
இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் குமரன் கூறும்போது, "பக்தர்கள் தங்கும் விடுதியைச் சுற்றிநிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும்முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சுற்றுச்சுவர் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்துநிர்வாக ஒப்புதலுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT