Published : 05 Mar 2020 08:26 AM
Last Updated : 05 Mar 2020 08:26 AM
சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்ததும், ஏப்ரல் மாதத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களையும், கட்சிநிர்வாகிகளையும் சந்திக்க அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தல், மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைவுக்குப் பிறகு நடக்கவுள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தல் என்பது மட்டுமல்ல, ரஜினி, கமல்ஆகியோரது அரசியல் பிரவேசமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், திமுக இப்போதே பணிகளை தொடங்கிவிட்டது. பிரசாந்த் கிஷோருடன் இணைந்து வாக்கு வங்கியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கிவிட்டது. அதேபோல, அதிமுக தரப்பிலும்தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு மாவட்ட வாரியான நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி, கட்சியினரின் கருத்துகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் கேட்டறிந்தனர். அதைத் தொடர்ந்துநேற்று முன்தினம், அதிமுக பேச்சாளர்களுக்கான கருத்தரங்கையும் நடத்தினர்.
கடந்த தேர்தலின்போது ‘முடியட்டும்… விடியட்டும்’ என்ற பெயரில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு மக்களையும், தொண்டர்களையும் சந்தித்தார். அதேபோல், இந்தமுறையும் ஏப்ரல் முதல் தொடர்ந்துசுற்றுப்பயணம் மேற்கொள்ள ஸ்டாலின் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியினரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மாவட்டவாரியாக பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்.
புதிய திட்டங்கள்
தற்போது அதிமுக தரப்பிலும் இதுபோன்ற சுற்றுப்பயணத்தை தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதை கருத்தில்கொண்டு, ஏப்ரல் 9-ம் தேதிக்கு பிறகு, அதாவது சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்ததும், முதல்வர் பழனிசாமி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தனது சுற்றுப்பயண திட்டத்தை வகுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்கவும், அவற்றை சுற்றுப் பயணத்தின்போது தொடங்கி வைக்கவும் முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பது மிகவும் முக்கியம். அத்துடன், வரும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், தொடர்ந்து மக்களை சந்திக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதிமுகவில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள 2, 3-ம் கட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தங்களை சந்தித்து பேசுவதை அதிகம் விரும்புகின்றனர்.
இதைக் கருத்தில்கொண்டே முதல்வர், துணை முதல்வரின்சுற்றுப்பயணம் வகுக்கப்படுகிறது. மக்களை சந்திப்பதற்கான களமாகவும் இந்த சுற்றுப்பயணம் அமையும்.
ஏற்கெனவே, சென்னையில் நடந்த கூட்டங்களில் சில நிர்வாகிகள் மீது புகார்கள் அளிக்கப்பட்டன. அந்தப் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். அதன்படி, சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக சில நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்றும் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர். சட்டப்பேரவையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்கவும், அவற்றை சுற்றுப் பயணத்தின்போது தொடங்கி வைக்கவும் முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அதேபோல், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தனது சுற்றுப்பயண திட்டத்தை வகுத்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT