Published : 04 Mar 2020 09:42 PM
Last Updated : 04 Mar 2020 09:42 PM
ஒத்தி வைக்கப்பட்டிருந்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தலில், அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து, சேலம் மாவட்டத்தின் 20 ஊராட்சி ஒன்றியங்களையும் அதிமுக கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, சேலம் மாவட்டத்தின் 20 ஊராட்சி ஒன்றியங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. அதில், ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தலில், 19 ஊராட்சி ஒன்றியங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. எஞ்சிய கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தலானது, போதிய எண்ணிக்கையில் வார்டு கவுன்சிலர்கள் வராததால், இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.
கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் தேர்தலில், அதிமுக 3 வார்டுகளையும், அதன் கூட்டணியான பாமக 3 வார்டுகளையும் கைப்பற்றியிருந்தது. திமுக 4 வார்டுகளிலும் சுயேச்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். திமுகவை விட, அதிமுக கூட்டணி அதிக வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி, தாழ்த்தப்பட்டோருக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், வார்டு கவுன்சிலர் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தாழ்த்தப்பட்டோர் எவரும் வெற்றி பெறவில்லை.
சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற இருவரிலும் தாழ்த்தப்பட்டோர் எவரும் இல்லை. ஆனால், திமுக சார்பில் போட்டியிட்ட வெற்றி பெற்றவர்களில் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தனர்.
இந்த பரபரப்பான இந்த சூழலில், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடவடிக்கை இருமுறை நடைபெற்றது. ஆனால், தேர்தலுக்குப் போதுமான எண்ணிக்கையில் வார்டு கவுன்சிலர்கள் வரவில்லை. இதனால், இருமுறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே, திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி, அதிமுகவில் இணைந்தார். இந்த சூழலில், கொளத்தூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
அதில், அதிமுக சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட புவனேஸ்வரி 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட பழனியப்பன் 5 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலைவர் பதவியை, அதிமுக கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி பாமகவுக்கும், கொளத்தூர் உள்ளிட்ட 19 ஒன்றியங்களில் தலைவர் பதவி அதிமுகவுக்கும் கிடைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment