Published : 04 Mar 2020 07:45 PM
Last Updated : 04 Mar 2020 07:45 PM
சொத்து வரி கட்டாமல் இழுத்தடித்து வந்த தனியார் பள்ளிகள், வணிக வளாகங்களில் மாநகராட்சி ஜப்தி, குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி, கடைகள் வாடகை, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடைக் கட்டணம், குப்பை வரி உள்ளிட்ட வருவாய் இனங்கள் வாயிலாக மொத்தம் ஆண்டிற்கு ரூ.207 கோடி வருமானம் கிடைக்கிறது. இதில் சொத்து வரி மட்டும் ரூ.97 கிடைக்கிறது.
மாநகராட்சியில் மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 158 கட்டிடங்கள் உள்ளன. 36 ஆயிரம் கட்டிடங்கள் வணிக ரீதியான கட்டிடங்கள். இந்தக் கட்டிடங்களுக்கு வணிக ரீதியில் சொத்து வரி நிர்ணயிக்கப்படுகிறது. மற்ற கட்டிடங்களுக்கு குடியிருப்பு அடிப்படையில் சொத்துவரி நிர்ணயம் செய்யப்படுகிறது. 2010ம் ஆண்டிற்கு முன் வரை தனியார் பள்ளிகளுக்கு அரசுப் பள்ளிகளைப் போல் சொத்து வரி நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. 2010-ம் ஆண்டு தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பதால் உள்ளாட்சித்துறை நிர்வாகம், வணிகக் கட்டிடங்களைப் போல் சொத்து வரி நிர்ணயம் செய்தது. அவர்கள் வரி கட்டாமல் நீதிமன்றத்திற்கு சென்றனர்.
2018-ம் ஆண்டில் மாநகராட்சி, தனியார் பள்ளிகள் சொத்து வரியை மறு சீராய்வு செய்து, வணிக ரீதியான சொத்து வரியை ரத்து செய்து, குடியிருப்புகளுக்குப் போடப்படும் சொத்து வரியில் இருந்து 50 சதவீதத்தை மட்டும் அதிகரித்து நிர்ணயித்தது. ஆனால், இந்த வரியையும் கட்ட முடியாது என்று தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. தற்போது இந்த வழக்கில் மாநகராட்சி 2018-ன் படி அமைத்த சொத்து வரியைக் கட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், தற்போது தனியார் பள்ளிகள், சொத்து வரியைக் கட்ட ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், பல பள்ளிகள் இன்னும் கட்டாமல் இழுத்தடிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், அந்தப் பள்ளிகளில் சொத்து வரியை வசூல் செய்ய மாநகராட்சி, ஓய்வு பெற்ற மூத்த மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். அவர்கள் ஆலோசனையில் மாநகராட்சி அதிகாரிகள் நிலுவையில் உள்ள வரியை வசூல் செய்ய தனியார் பள்ளிகள், வணிக ரீதியான கட்டிடங்களில் ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு தனியார் கல்லூரியும் 285 தனியார் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகள், 2018-ம் ஆண்டு நிர்ணயம் செய்த சொத்து வரி அடிப்படையில் ரூ.3 கோடி வரி பாக்கி இருந்தது. தற்போது சில பள்ளிகள் தாமாக வந்து நீதிமன்ற உத்தரவுப்படி வரியைக் கட்டிவிட்டன. கட்ட இழுத்தடிக்கும் பள்ளிகளில் ஜப்தி நடவடிக்கை எடுக்கச் செல்வதால் அவர்கள் உடனடியாக வரியைக் கட்டி வருகின்றனர்.
பழைய வரி நிர்ணயம் அடிப்படையில் தனியார் பள்ளிகள் ரூ.29 கோடி வரி பாக்கி வைத்திருந்தன. ஆனால், 2018-ம் ஆண்டு புதிய வரி நிர்ணயம் அடிப்படையில் ரூ.3 கோடி மட்டுமே பாக்கி இருந்தது. இதில், ஓரளவு வரியை தனியார் பள்ளிகள் கட்டிவிட்டன. நீண்ட நாள் வரி பாக்கி வைத்திருந்த ஒரு பள்ளி சில நாளுக்கு முன் ரூ.22 லட்சத்தை ஒரே செக்கில் போட்டு கொடுத்தது. தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி வழங்கவில்லை. வணிக அடிப்படையிலே கல்விக் கட்டணம் வசூல் செய்கின்றன. சில பள்ளிகள் ஒரு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை கூட ஒரு மாணவருக்கு கல்விக் கட்டணம் வசூல் செய்கின்றன. ஆனால், அவர்களே சொத்து வரி செலுத்தத் தயங்குவது கவலை அளிக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசுப் பள்ளிகளுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.
மாநகராட்சிக்கு ஒத்துழையுங்கள்..!
ஆணையாளர் விசாகன் கூறுகையில், ‘‘சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்புக் கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும், வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகளும், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
பொது சீராய்வில் உயர்த்தப்பட்ட வரியும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வரி உயர்வுக்கு முன் செலுத்திய பழைய வரியைத்தான் செலுத்தச் சொல்கிறோம். ஏற்கெனவே புதிய வரிவிதிப்பு அடிப்படையில் கூடுதல் வரி செலுத்தியிருந்தால் வரும் காலங்களில் வரவு வைக்கப்படும். மதுரை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி இனங்களைப் பொதுமக்கள் உடனடியாகச் செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு வசதியாக மார்ச் மாதம் முழுவதும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும், கணினி வரி வசூல் மையங்கள் செயல்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment