Published : 04 Mar 2020 07:30 PM
Last Updated : 04 Mar 2020 07:30 PM
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெறுவதாக இருந்த கூடங்குளம் உள்ளூர் திட்ட குழும மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் புதிய வீடுகள் உள்ளிட்ட கட்டுமானங்களும், தொழிற்சாலைகளும் அமைப்பதற்கு 1991-ம் ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட சிறப்பு ஆணையின்படி, கூடங்குளம் உள்ளூர் திட்டக் குழுவில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலைய திட்டப் பொறியாளர் இந்தக் குழுவிற்குத் தலைவராகவும், ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செயலாளராகவும், சேரன்மாதேவி சார் ஆட்சியர் உள்ளிட்ட 6 பிற துறைகளைச் சார்ந்த மாவட்ட அளவிலான அதிகாரிகள் உறுப்பினர்களாகவும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் ஏதாவது புதிய கட்டிடங்கள் அல்லது தொழிற்சாலைகள் கட்டுவதாக இருந்தால் இந்தக் குழுவிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அனுமதி அளிப்பது தொடர்பாக ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை ராதாபுரத்தில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு அனுமதி வழங்க வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது. ஆனால் இது குறித்து பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. பொதுமக்களின் கவனத்துக்கு தெரிவிக்காமலேயே இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டு சிலருக்கு அனுமதியும் சிலருக்கு அனுமதி மறுப்பும் செய்யப்படுவதாக தற்போது புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் கூடங்குளம் உள்ளூர் திட்ட குழுமம் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ராதாபுரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று காலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் தரப்பில் சிலர் இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தனர். இந்தக் கூட்டம் குறித்து தெரியவந்ததும் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் மற்றும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் அங்கு வந்தனர். இதையடுத்து கூட்டத்தை அதிகாரிகள் திடீரென்று ரத்து செய்தனர். கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்ததை அடுத்து அணுஉலை எதிர்ப்பாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கூடங்குளம் உள்ளூர் திட்டக் குழுமக் கூட்டத்தில் 5 கி.மீ. சுற்றளவில் உள்ள கல்குவாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சட்டவிரோதமாக சில கல்குவாரிகள் இந்தப் பகுதிக்குள் செயல்படுவதையும், அதைத் தடுக்க உள்ளூர் திட்டக் குழுமம் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. கூடங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, இத்தகைய கூட்டம் நடைபெறுவது குறித்து உள்ளூர் மக்களுக்கு 30 நாட்களுக்குமுன்பு செய்தித்தாள் மூலமாக அறிவிப்பு செய்ய வேண்டும். மேலும் தண்டோரா மூலமும் விளம்பரப்படுத்தி இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT