Published : 04 Mar 2020 05:37 PM
Last Updated : 04 Mar 2020 05:37 PM
ஜிஎஸ்எல்வி-எப்10 ராக்கெட் மூலம் ஏவப்படுவதாக இருந்த ஜிஐசாட்-1 செயற்கைக்கோள், தொழில்நுட்பக் காரணங்களுக்காகத் தள்ளி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
பேரிடர் மீட்புப் பணிக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள ஜிஐசாட்-1 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் புவி வட்டப்பாதையில் நாளை (மார்ச் 5) நிலைநிறுத்தப்படுவதாக இருந்தது.
தற்போதைய பருவநிலை மாறுபாடுகளைக் கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ‘ஜியோ இமேஜிங்’ செயற்கைக்கோள்களை (ஜிஐசாட்) விண்ணில் நிலைநிறுத்த 2013-ம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டது. அதில் முதல்கட்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ள ஜிஐசாட்-1 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (மார்ச் 5) மாலை 5.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருந்தது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் ஜிஐசாட்-1 செயற்கைக்கோள் ஏவுதல், தொழில்நுட்பக் காரணங்களுக்காகத் தள்ளி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. திருத்தியமைக்கப்பட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
முதல் முறையாக...
புவியில் இருந்து 36 ஆயிரம் கி.மீ. தூரம் கொண்ட புவி வட்டப்பாதையில் தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை மட்டுமே இஸ்ரோ நிலைநிறுத்தி வருகிறது. இதர செயற்கைக்கோள்கள் தரையில் இருந்து 500 கி.மீ. தூரம் உடைய தாழ்வு சுற்றுப் பாதையில்தான் நிலைநிறுத்தப்படுகின்றன. முதல் முறையாக தற்போது கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட்-1 புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதில் முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT