Published : 04 Mar 2020 02:10 PM
Last Updated : 04 Mar 2020 02:10 PM
உரிமம் இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்க உத்தரவிட்ட வழக்கில் மூடப்பட்ட நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க கேட்கும் விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் பரிசிலீத்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் உரிமம் இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் தமிழகம் முழுதும் உரிமம் இன்றி இயங்கிய 672 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து மேலும் சில தகவல்களுடன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குடிநீர் ஆலைகள் சங்கம் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதத்தை முன் வைத்தனர்.
இதையடுத்து இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக நீதிமன்ற அமர்வு தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். அதில், “மூடப்பட்ட நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க கேட்டு கொடுக்கும் விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் பரிசிலீத்து முடிவெடுக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்தோடு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
சட்ட விரோத நிறுவனங்களை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் 2 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவை மாவட்ட நீதிபதிகள் அமைக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரின் அளவை மீண்டும் அளவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட அமர்வு வழக்கு விசாரணையை மார்ச் 13-க்கு ஒத்தி வைத்தனர்.
வழக்கு முன் விபரம்:
சட்டவிரோத குடிநீர் ஆலை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றம் உத்தரவிட்டபடி அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்தார் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண். அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைத்தது குறித்து அவர் தாக்கல் செய்த அறிக்கையில், “தமிழகம் முழுவதும் மொத்தம் 682 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. சீல் வைக்கப்பட்ட இந்த ஆலைகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரி 116 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்த விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது, தண்ணீர் அளவிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா? மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து உரிமம் புதுப்பிக்கப்படும். அதற்குக் கட்டணமாக 6000 ரூபாய் வசூலிக்கப்படும். எடுக்கப்படும் தண்ணீரின் அளவைக் கணக்கிட்டு அதற்குப் பணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை, கோவை, தமிழ்நாடு குடிநீர் ஆலை சங்கங்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஜி.மாசிலாமணி, பி.எஸ்.ராமன் ஆகியோர் வாதத்தில், “இந்திய தரச்சான்று நிறுவனம், தமிழக சிறு தொழில்துறை, உணவுத் தரம் மற்றும் பாதுகாப்பு துறை, உள்ளாட்சி அமைப்பு மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றிடம் சான்றிதழ்களைப் பெற்று ஆலைகள் இயங்கி வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகள் எடுக்கும் நிலத்தடி நீரில் ஒரு சதவீதத்தையே குடிநீர் உற்பத்தியாளர்கள் எடுக்கின்றனர். செங்கல் சூளை, தோல், பண்ணை, ஸ்டீல் ஆகிய துறைகள் எடுக்கும் நீரைக் கட்டுப்படுத்த அரசு முயலவில்லை. நிலத்தடி நீர் பகுதிகளை 4 ஆகப் பிரித்த பின்னர், பல இடங்களில் நீரின் அளவு உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தனர்.
முறையாக உரிமம் பெற்றுச் செயல்படும் ஆலைகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசின் கவனத்திற்குத் தெரியாமல் இயற்கை வளம் சுரண்டப்படுகிறது. அதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது எனக் குறிப்பிட்டனர்.
குடிநீர் நிறுவனங்களுக்கு எதிராக மட்டும் வழக்கை விசாரிக்கவில்லை என்றும், சட்டவிரோத நீர் எடுப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கின் மீது இடைக்கால உத்தரவு மார்ச் 4-ம் தேதி (நாளை) பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் விண்ணப்பம் அளித்தால் பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT