Published : 04 Mar 2020 07:43 AM
Last Updated : 04 Mar 2020 07:43 AM
பேரிடர் மீட்பு பணிக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஜிஐசாட்-1 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் புவிவட்டப்பாதையில் நாளை (மார்ச் 5) நிலைநிறுத்தப்பட உள்ளது.
தற்போதைய பருவநிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ‘ஜியோ இமேஜிங்’ செயற்கைக்கோள்களை (ஜிஐசாட்) விண்ணில் நிலைநிறுத்த 2013-ம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டது.
அதில் முதல்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள ஜிஐசாட்-1 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (மார்ச் 5) மாலை 5.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே புவியில் இருந்து 36 ஆயிரம் கிமீ தூரம் கொண்ட புவிவட்டப்பாதையில் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை மட்டுமே இஸ்ரோ நிலைநிறுத்திவருகிறது. இதர செயற்கைக்கோள்கள் தரையில் இருந்து 500 கிமீ தூரம் உடைய தாழ்வுசுற்றுப்பாதையில்தான் நிலைநிறுத்தப்படுகின்றன. முதல்முறையாக தற்போது கண்காணிப்புசெயற்கைக்கோளான ஜிஐசாட்-1புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
அதிநவீன 3டி கேமராக்கள்
இந்த ஜிஐசாட் 2,268 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள். இதில் பொருத்தப்பட்டுள்ள 5 விதமான3டி கேமராக்கள் மற்றும் தொலைநோக்கி மூலம் புவிப்பரப்பை துல்லியமாக படம் எடுக்கவும் பார்க்கவும் முடியும். இதிலுள்ள மேம்படுத்தப்பட்ட ஆன்டெனா அதிகளவு படங்கள் மற்றும் தகவல்களை ஒருங்கிணைத்து விரைவாக அனுப்பவும், பெறவும் உதவியாக இருக்கும்.
வானிலை நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து புயல்உள்ளிட்ட பேரிடர் காலங்களில்எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள உதவும். இதுதவிர பனிப்பொழிவு, மேகத்திரள்களின் பண்புகள் மற்றும் கடல் ஆய்வு சார்ந்த பணிகளுக்கும் விவசாயம், கனிம வளங்கள் மற்றும் காடுகள் பாதுகாப்புக்கும் பயன்படும்.
மேலும் எப்-10 ராக்கெட் ஜிஎஸ்எல்வி வகையில் தயாரிக்கப்பட்ட 14-வது ராக்கெட்டாகும். இதில் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
அதனுடன் 4 மீட்டர் விட்டம்கொண்ட ‘ஓகிவ்’ ரக வெப்பகவச தகடுகளும் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தவரிசையில் அடுத்ததாக ஜிஐசாட்-2 ஜூன் மாதம் ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT