Published : 03 Mar 2020 07:57 PM
Last Updated : 03 Mar 2020 07:57 PM
மாணவர் சமுதாயம் மூலம் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சரியான வழிமுறை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் தேசிய மாணவர் படை, பிற மாணவ, மாணவியர் குழுக்கள் மற்றும் அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு, செயல்விளக்கம் குறித்த ஒருநாள் பயிற்சி முகாமை வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை காமராசர் பல்கலையில் ஏற்பாடு செய்து இருந்தது.
இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முகாமை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தொடங்கிவைத்தார்.
மாணவர்கள் மத்தியில் அவர்பேசியதாவது:
அரசு சார்பில் கடலோரத்தில் வசிக்கும் மக்களுக்கென பேரிடர் அபாய மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. ரூ.126 கோடியில் 6 முதல் 12-ம் வகுப்புப் பாடத்திட்டத்திலும், ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டத்திலும் பேரிடர் மேலாண்மை பாடங்கள் அறிமுகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
32 மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை பயிற்சி, ஒத்திகை, விழிப்புணர்வு நடக்கிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் பேரிடர் குறித்த கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. இதன்படி, காமராசர் பல்கலையில் இப்பயிற்சி முகாம் நடந்துள்ளது.
மேலும், தெருமுனை நாடகம், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலமும், குறும்படம், துண்டு பிரசுரங்கள், பேரணி, கண்காட்சி, பேச்சு, கட்டுரை, ஓவியம் போட்டிகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இங்கு பயிற்சி பெறுவோர் கல்லூரிகளிலும், கிராமங்களுக்கும் சென்று பயிற்சி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சரியான வழி. இத்துறையில் உலக நாடுகளுக்கே தமிழகம் முன்மாதிரியாகத் திகழ்கிறது. எவ்வித பேரிடர் வந்தாலும், எதிர்கொள்ளும் வகையில் உள்ளோம். முன்எச்சரிக்கையாக செயல்பட்டதால் கஜாவில் உயிர் சேதமில்லை. அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்விக்கு அதிமுக அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. முதலாளிகள், பணக்கார பிள்ளைகள் பயன்படுத்தும் லேப்-டாப்களை, ஏழை மாணவர்கள் வழங்கிறோம். இதன் மூலம் வெளிநாடு வரை தொடர்பு கொண்டு மாணவர்கள் அறிவை வளர்க்கின்றனர். இதைப் பயன்படுத்தி மாணவர்கள் பெரிய அதிகாரிகளாக வர வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
முன்னதாக முகாமில் பேரிடர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரத்தை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வெளியிட்டார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெற்றுக்கொண்டார்.
வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், ஆட்சியர் டிஜி. வினய், காவல்ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென் மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், டிஐஜி ஆனிவிஜயா, காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் ஜகந்நாதன், மாநகராட்சி ஆணையர் விசாகன் மற்றும் எம்எல்ஏக்கள் விவி. ராஜன்செல்லப்பா, நீதிபதி, மாணிக்கம், பெரியபு்ள்ளான், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பயிற்சி முகாமையொட்டி பல்கலைக்கழக முவ.அரங்கில் பேரிடர் மீட்பு உபகரணங்கள், பொருட்கள் கண்காட்சிக்கென வைக்கப்பட்டு இருந்தன. அமைச்சர்கள், அதிகாரிகள் மாணவர்கள் பார்த்தனர். செஞ்சிலுவை சங்கங்கத்தினர், ஆபத்து நேரத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது, மீட்புப் பணி பற்றி தீயணைப்புத் துறையினர்செயல் விளக்கம் அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT