Published : 03 Mar 2020 02:10 PM
Last Updated : 03 Mar 2020 02:10 PM

சர்ச்சைக்குரிய டிக் டாக் வீடியோ வெளியிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி: வருத்தம் தெரிவித்து வீடியோ பதிவு

ராஜீவ் நினைவிடத்தில் சர்சைக்குரிய வீடியோவைப் பதிவு செய்த நாம் தமிழர் கட்சியின் இளைஞரணிப் பிரமுகர் பிரச்சினை பெரிதானதை அடுத்து, வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் மரணத்தை நியாயப்படுத்திப் பேசியது சர்ச்சையானது.

சீமான் பேச்சைக் கண்டித்த காங்கிரஸ் கட்சியினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி போலீஸார் சீமான் மீது வன்முறையைத் தூண்டுதல் (153A), பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (504) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் இளைஞரணியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவர் திடீரென ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தின் உள்ளே சென்று டிக் டாக் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில், ராஜீவ் நினைவிடத்தில் நின்றுகொண்டு சீமான் பேசிய ஒரு வசனத்தைப் பேசினார். ''நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள். இனிமேல் எந்த நாட்டின் அதிபராவது எம் இனத்தின் மீது கை வைத்தால் அவர்களுக்குத் தூக்குதான்'' என்று பேசி ராஜீவ் உயிரிழந்த இடத்தில் உள்ள நினைவு கல்வெட்டைக் காட்டினார்.

இதைப் பார்த்த காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்துள்ளனர். தேசியப் பாதுகாப்புத் தடுப்புச் சட்டத்தில் சாட்டை துரைமுருகனைக் கைது செய்ய வேண்டும் என ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சியினர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியைக் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். இன்று டிஜிபி திரிபாதியைச் சந்தித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா புகார் அளிக்கிறார்.

இந்நிலையில், டிக் டாக் வீடியோ வெளியிட்ட சாட்டை துரைமுருகன், பிரச்சினை பெரிதாக வெடிப்பதைக் கண்டு வருத்தம் தெரிவித்து மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது டிக் டாக் வீடியோவை, பதிவிட்ட ஒரு மணிநேரத்திலேயே நீக்கி விட்டதாகக் கூறியுள்ளார்.

தான் விளையாட்டுத்தனமாக செய்த காரியம், அதை வீடியோவாகப் பதிவிட்டவுடன் எதிர்ப்பு கிளம்பியதும் சற்று நேரத்திலேயே நீக்கிவிட்டேன். அது குறித்து எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

அவர் வருத்தம் தெரிவித்தாலும் காங்கிரஸ் கட்சி இதை எளிதாகப் பார்க்கவில்லை. ஆகவே காங்கிரஸ் கட்சி மாநில அளவில் அளிக்கும் புகார் மூலம் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப் பாயலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x