Published : 03 Mar 2020 10:05 AM
Last Updated : 03 Mar 2020 10:05 AM

தவறுதலாக தஞ்சாவூருக்கு ரயிலில் வந்து 5 நாட்களாக திரிந்த முதியவர் மகனிடம் ஒப்படைப்பு

நாகரெத்தினம்

தஞ்சாவூர்

தவறுதலாக தஞ்சாவூருக்கு வரும் ரயிலில் ஏறி 5 நாட்களாகத் திரிந்த பரமக்குடியைச் சேர்ந்த 80 வயது முதியவர் வாட்ஸ் அப் தகவலால், அவரது மகனிடம் சேர்க்கப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த சாத்தனூரைச் சேர்ந்தவர் நாகரெத்தினம்(80). இவருடைய மனைவி இறந்து விட்டார். இவரது மகன்கள் குமார், ராஜாராம். இருவரும் ஓட்டுநராக உள்ளனர். முதுமையால் ஞாபக மறதி, சரியாகப் பேச முடியாத நிலையில் இருந்துவந்த நாகரெத்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரத்தில் மூத்த மகன் குமாருடன் வசித்து வருகிறார். பரமக்குடியில் இளைய மகன் ராஜாராம் வசித்து வருகிறார்.

முதியோர் உதவித்தொகையை எடுப்பதற்காக பரமக்குடியில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு கடந்த பிப்.26-ம் தேதி வந்த நாகரெத்தினம், பணத்தை எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்துக்குச் சென்றார். ஆனால், ராமநாதபுரம் செல்லும் ரயிலில் ஏறுவதற்குப் பதிலாக தவறுதலாக தஞ்சாவூர் வழியாக சென்னை செல்லும் ரயிலில் ஏறிவிட்டார்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இறங்கி, வழி தெரியாமல் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிச் சாலையில் மயங்கி விழுந்து கிடந்தார். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற வல்லத்தைச் சேர்ந்த ரியாசுதீன் என்பவர் முதியவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி தஞ்சாவூர் மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் முறையான பதில் அளிக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த செல்வமணி என்பவரின் வீட்டில் முதியவரை அமரவைத்து, சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்.

பின்னர் அந்த முதியவரிடம் விசாரித்தபோது, பரமக்குடி அருகே சாத்தனூர் என தனது ஊரின் பெயரை மட்டும் கூறியுள்ளார். வேறு எதுவும் கூறவில்லை. இதையடுத்து, பரமக்குடி தாலுகா காவல் நிலையத்துக்கு போன் செய்து முதியவரைப் பற்றிய விவரங்களை ரியாசுதீன் தெரிவித்தார்.

இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், சாத்தனூரைச் சேர்ந்த 2 பேரின் செல்போன் எண்களைக் கொடுத்துள்ளார். அவர்களுக்கு முதியவர் நாகரெத்தி னத்தின் போட்டோவை வாட்ஸ் அப்-பில் ரியாசுதீன் அனுப்பினார். அவர்கள், அந்தப் படத்தையும் தகவலையும் பரமக்குடி, சாத்தனூர் பகுதியில் உள்ள பலருக்கும், பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களுக்கும் பகிர்ந்துள்ளனர்.

இத் தகவலை வாட்ஸ் அப்-பில் பார்த்த நாகரெத்தினத்தின் இளைய மகன் ராஜாராமன், அதில் இருந்த ரியாசுதீன் செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டார். இதையடுத்து நேற்று தஞ்சாவூருக்கு வந்த ராஜாராமன், ரியாசுதீன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துவிட்டுத் தன் தந்தையை அழைத்துச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x