Published : 02 Mar 2020 09:59 PM
Last Updated : 02 Mar 2020 09:59 PM
கோப்புகள் தேக்கம் தொடர்பாக பொதுமக்கள் வரிசையில் நின்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று மாலை சந்தித்தார்.
புதுச்சேரியிலுள்ள ஏனாம் பிராந்தியத்தில் தேர்வாகி தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளார். ஏனாமுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சென்றபோது கருப்புச் சட்டை அணிந்து கருப்பு பலூன் விட்டு எதிர்ப்பைத் தெரிவித்தார். இருவருக்கும் இடையில் மோதல் நீடித்து வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் இருந்து நடந்து ராஜ்நிவாஸுக்கு அமைச்சர் மல்லாடி சென்றார். "கடந்த 25-ம் தேதி முதல் ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டு வருகிறேன். ஏனாம் தொகுதி பிரச்சினைகள், என் துறை சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஏற்கெனவே அவருக்குப் பல மனுக்கள் அனுப்பியுள்ளேன். மார்ச் 11-ம் தேதி துறை செயலர்களை அழைத்து உங்களைச் சந்திப்பேன் என பதில் அளித்துள்ளார். அதனால் சாதாரண மக்களில் ஒருவனாக ஆளுநர் கிரண்பேடியை மக்கள் சந்திப்பு நேரத்தில் சந்திக்கச் செல்கிறேன்" என்றார்.
ராஜ்நிவாஸில் அமைச்சர், எம்எல்ஏ என எதுவும் குறிப்பிடாமல் தனது பெயரையும், ஊரையும் மட்டும் எழுதித் தந்தார்.
சுமார் அரை மணிநேரத்துக்குப் பிறகு ராஜ்நிவாஸிலிருந்து வந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில், ''சுற்றுலா உட்பட எனது துறை சார்ந்த 11 கோப்புகளுக்கு அவர் ஒப்புதல் தரவில்லை. பல கோப்புகள் அவர் அலுவலகத்தில் தேங்கியுள்ளன. அதில் முக்கிய 8 கோப்புகள் தொடர்பாக அவரைச் சந்தித்துக் கேள்வி எழுப்பினேன். ஒரு வார்த்தை கூட அவர் பதில் தரவில்லை. ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து காலம் தாழ்த்துவதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆதாரங்களுடன் அவரிடம் கோப்புகள் தேங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டினேன். கிரண்பேடி பதில் தரவில்லை. அடுத்தகட்டமாக டெல்லி சென்று உள்துறை அமைச்சகத்தில் தெரிவிப்பேன். உள்துறை அமைச்சரையும் சந்திக்க நேரம் கோருவேன்" என்று குறிப்பிட்டார்.
ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜ்நிவாஸ், புதுச்சேரி பிரச்சினைகள், கோப்புகள் தேக்கம், மோதல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT