Published : 02 Mar 2020 09:25 PM
Last Updated : 02 Mar 2020 09:25 PM
வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யும், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கேன் குடிநீர் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கேன் குடிநீர் சுத்திகரிப்பாளர்களின் வேலை நிறுத்தம் 5-வது நாளாக நீடிக்கும் நிலையில், சென்னையில் கேன் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் நாளொன்றுக்கு 1 கோடி லிட்டர் குடிநீர் தேவையாக உள்ளது. குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் பெரும்பாலான மக்கள் கேன் குடிநீரைத்தான் பெரிதும் நம்பியுள்ளனர். உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், மால்கள், வணிக நிறுவனங்கள், ஐடி கம்பெனிகள், ஊழியர்கள் பங்காற்றும் நிறுவனங்கள் என எங்கும் கேன் குடிநீர் தேவை உள்ளது. ஆனால் கேன் குடிநீர் சுத்திகரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கேன் விலை 40 ரூபாயிலிருந்து ரூ.60, ரூ.80 வரை விற்கப்படுகிறது.
தமிழகத்தில் சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வர்த்தகப் பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதைக் கண்காணிக்க, கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில், மூன்றில் ஒருபங்கு நிறுவனங்கள்தான் முறையாக அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வரும் மீதமுள்ள நிறுவனங்களை மூடி சீல் வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சட்டவிரோதமாகச் செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள் இதுவரை சுமார் 400 ஆலைகளுக்கு சீல் வைத்துள்ளனர். உரிமம் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கலை நீக்கி எளிதாக உரிமம் வழங்கும் நடைமுறையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து குடிநீர் உற்பத்தியாளார்கள் ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி. கதிர் ஆனந்துக்குச் சொந்தமான அருவி குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அனுமதியின்றி குடிநீர் ஆலை செயல்பட்டதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
'வேலூர் மாவட்டத்தில் 40 குடிநீர் ஆலைகள் உள்ளன. அதில், மூன்று ஆலைகள் மட்டுமே நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற்றுள்ளன. மீதமுள்ள 37 ஆலைகளும் மூடப்பட்டு வருகின்றன' என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
ஆனால், 2003-ம் ஆண்டே குடிநீர் ஆலைக்கான உரிமத்தை பெற்றுள்ளதாக கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குடிநீர் ஆலைகள் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர, குடிநீர் உற்பத்தியாளர்களுடன் அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பொதுப்பணித்துறை செயலாளரை கேன் குடிநீர் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT