Published : 02 Mar 2020 08:02 PM
Last Updated : 02 Mar 2020 08:02 PM
கரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் அதிகரித்துள்ள நிலையில் ஈரானில் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்டு சொந்த இடத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட மீனவர் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அளித்த மனுவில், "திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு மீனவர் கிராமங்களை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈரான் நாட்டில் அந்நாட்டு முதலாளிகளிடம் ஒப்பந்த பணியாளர்களாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள திருநெல்வேலி மாவட்ட மீனவர்களுக்கும் அந்நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இங்குள்ள உறவினர்களிடம் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவித்து வருகிறார்கள். எனவே அம்மீனவர்களை ஈரானிலிருந்து பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேரன்மகாதேவி தாலுகா பாப்பாக்குடி ஒன்றியம் வடக்கு அரியநாயகிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தாளாளர்குளம் பகுதி மக்கள் அளித்த மனுவில், "தாளாளர்குளம் பகுதியிலிருந்து வடக்கு அரியநாயகிபுரம் ஊராட்சி அலுவலகத்துக்கு செல்ல 10 கி.மீ. தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.
இரு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே தாளாளர்குளம் பகுதியை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி அமைக்க வேண்டும். அவ்வாறு ஊராட்சி அமைத்தால் தாளாளர்குளத்துடன் இலந்தைகுளம், மனுஜோதி ஆசிரமம், ஹைரிநகர், இடையம்பாறை, கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளும் அதில் இணைக்கப்படும்.
இந்த கிராமத்தினரும் பயன்பெற வாய்ப்பு உருவாகும். மேலும் முக்கூடலில் இருந்து வரும் சாலை, சிங்கம்பாறையிலிருந்து வரும் சாலை, முக்கூடல்- ஆலங்குளம் இணைப்பு சாலை உள்ளிட்ட சாலைகள் பலத்த சேதமடைந்திருத்தபதால் இச்சாலைகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இச் சாலைகளை சீரமைத்து பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் மா. இரணியன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், "திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்- திருச்செந்தூர் சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பணிகள் நிறைவு பெறவில்லை. இதனால் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியரும், வியாபாரிகள், தொழில் சம்பந்தமாக வேறுஇடத்துக்கு செல்பவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை கவனத்தில் கொண்டு மேம்பாலப் பணிகளை விரைவாக மேற்கொண்டு முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமராஜர் சமூகநலப்பேரவை தலைவர் நா. நற்றமிழன் அளித்த மனுவில், "தொடர்ந்து 5 ஆண்டுகளுக்குமேல் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நாங்குநேரியில் நடைபெற்ற ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டது. முதல்வரின் சிறப்பு பிரிவுக்கும் மனு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையும் பட்டா வழங்கவில்லை. சாதாரண மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வள்ளியூர் பகுதியை சேர்ந்த திருநங்கைகள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், உரிய பரிசீலனைக்குப் பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT