Published : 02 Mar 2020 04:19 PM
Last Updated : 02 Mar 2020 04:19 PM
தமிழகத்தில் என்பிஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு) கணக்கெடுப்பின்போது ஆதாரம் எதையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. சிறுபான்மையினர் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என முதல்வர் பழனிசாமி நேற்று பேசினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகத்தில் சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் ரூ.380 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மாலை நடை பெற்றது. மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இவ்விழாவுக்குத் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
அரசு மருத்துவக் கல்லூரிக்கு பூமி பூஜையைத் தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
“நாங்கள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாகச் சொல்லிக் கொள்கிறோம். சிறுபான்மை மக்கள் அச்சப்பட தேவையில்லை. எந்தவிதத்திலும் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மை மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற உறுதியை இந்த அரசு தருகிறது. அமைதியான மாநிலம் தமிழ்நாடு.
அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சினையை உருவாக்கி இன்றைக்கு அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. அதற்கு நீங்கள் துணை போக வேண்டாம் என்று சிறுபான்மை மக்களைத் தாழ்மையோடு இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, வண்ணாரப்பேட்டையிலிருந்து இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளும், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளும் என்னை வந்து சந்தித்தார்கள். அதேபோல பல்வேறு மாவட்டங்களிலிருந்து இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்னைச் சந்தித்தார்கள். ஒரு அச்ச உணர்வைத் தெரிவித்தார்கள்.
நான் அவர்களிடத்திலே தெளிவாகச் சொன்னேன். தமிழ் மண்ணில் பிறந்த எந்த ஒரு இஸ்லாமியரும் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தெளிவாகச் சொன்னேன். ஆகவே, நீங்கள் அச்சப்பட வேண்டியதே இல்லை.
நமது பக்கத்து மாநிலங்களான ஆந்திர மாநிலம், தெலங்கானா மாநிலம் போன்ற மாநிலங்களிலேயே எப்படி என்பிஆர் எடுக்கின்றார்களோ, அதையே நாங்கள் கடைப்பிடிப்போம் என்பதைத் தெளிவுபடுத்தி விட்டோம். மத்திய அரசும் தெளிவுபடுத்தி விட்டது. என்பிஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு) எடுக்கின்றபோது நீங்கள் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விரும்பினால் சொல்லலாம்.
ஆனால், சிலர் வேண்டுமென்றே திரும்பத் திரும்ப இஸ்லாமிய மக்களிடையே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தி, இன்றைக்கு அவர்களுக்கு ஒரு நிம்மதியில்லாத வாழ்க்கையை உருவாக்கி இருக்கிறார்கள்.
சிறுபான்மை மக்களை நாங்கள் கேட்டுக்கொள்வது எல்லாம், எங்களுடைய அரசு, எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, எங்களது ஆட்சிக் காலத்திலும் சரி, நாங்கள் உங்களுக்குத் துணை நிற்போம். உங்களுக்கு அரணாக இருப்போம். உங்கள் பாதுகாவலராக இருப்போம். ஆகவே, சிறுபான்மை மக்கள் அச்சப்படத் தேவையில்லை. நீங்கள் இயல்பு வாழ்க்கை வாழுங்கள்.
இஸ்லாமியப் பெண்கள் இரவு நேரங்களில் கூட சாலையிலே அமர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து, அன்புகூர்ந்து நான் கேட்டுக் கொள்வது எல்லாம், அதைத் தவிர்த்து விட்டு, அரசுக்கு ஒத்துழைப்பு நல்குங்கள்.
நீங்கள் எண்ணுகின்றபடி இந்த அரசாங்கம் உங்களுக்கு ஒத்துழைக்கும். அதேபோல என்ஆர்சி பற்றி மத்திய அரசு கேட்கவில்லை. அதைப்பற்றி நமக்குத் தேவையில்லை”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...