Published : 02 Mar 2020 12:51 PM
Last Updated : 02 Mar 2020 12:51 PM
தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று கூடியது. இதில் சட்டப்பேரவை மானியக் கோரிக்கைக்கான கூட்டம் மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 15-வது சட்டப்பேரவையின் 8-வது கூட்டம் மற்றும் வரும் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி முடிந்தது.
2020-2021 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 17-ம் தேதி மீண்டும் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 20-ம் தேதி அன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு மார்ச் -9-ம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று காலையில் நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மானியக் கோரிக்கைக்கான தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை ஒரு மாதம் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. மேலும், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் எந்தெந்த நாட்கள் நடைபெறும் என்பது தொடர்பாகவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
இதன்படி தமிழகத்தில் பல்வேறு அமைச்சர்களுக்குக் கீழ் உள்ள 80 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படும். நிதி நிலை கோரிக்கைகள் விவாதமின்றி நிறைவேற்றப்படும். இந்த ஆட்சியின் முழுமையான பட்ஜெட்டை ஒட்டிய இறுதி மானியக் கோரிக்கை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 31 நாட்களில் மார்ச் 9-ம் தேதி, முதல் நாள் இரங்கல் கூட்டத்துடன் கூட்டம் ஒத்திவைக்கப்படும். மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மார்ச் 11-ம் தேதியிலிருந்து மானியக்கோரிக்கை கூட்டம் நடக்கும். 31 நாட்களில் வார விடுமுறை, தெலுங்கு வருடப்பிறப்பு, மஹாவீர் ஜெயந்தி என 9 நாட்கள் பேரவை நடக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT