Published : 02 Mar 2020 08:06 AM
Last Updated : 02 Mar 2020 08:06 AM
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 68-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் நேற்று உற்சாகமாகக் கொண்டாடினர்.
திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினின் 68-வது பிறந்த நாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட திமுகவினர் தயாராகிவந்த நிலையில், ‘‘திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பிறந்த நாள் கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை. எனவே, பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் யாரும் நேரில் வர வேண்டாம்’’ என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நலத்திட்ட உதவிகள்
ஸ்டாலினை நேரில் சந்தித்துவாழ்த்து தெரிவிக்க முடியாவிட்டாலும் தமிழகம் முழுவதும் திமுகவினர் அன்னதானம், இலவச நோட்டு, புத்தகங்கள், வேட்டி, சேலை, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்என்று பல்வேறு உதவிப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.
சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டையில் நேற்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதல் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை எம்.பி. தமிழச்சிதங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது பேசிய உதயநிதி, “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் உழைத்து வருகிறார். ஸ்டாலின் தலைமையில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுககூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றிருந்தால் 90 சதவீதஇடங்களில் திமுக அணி வெற்றிபெற்றிருக்கும். மக்களவைத் தேர்தல் போல 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். ஸ்டாலின் முதல்வராவார்’’ என்றார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மண்ணடியில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, மத்திய சென்னைஎம்.பி. தயாநிதி மாறன், திராவிடர் கழக பிரசாரச் செயலாளர் அருள்மொழி, மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் சாந்தோம் சிஎஸ்ஐ காது கேளாதோர் பள்ளியில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் 2,500 பேருக்கு பல்வேறு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாதவரம் தொகுதி வட பெரும்பாக்கத்தில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் திமுக கொடியேற்றினார். பொதுமக்களுக்கு உதவிப் பொருள்களும் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டன.
கமல்ஹாசன் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்றுவெளியிட்ட ட்விட்டர் பதிவு:
அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாள்கள் ஒலித்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT