

நடிகர்கள் ரஜினி - கமல் தனித்தோ இணைந்தோ நடிகர் சங்கத்தேர்தலை கூட எதிர்கொண்டது இல்லை என தேமுதிக தலைவர்விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் சென்னை தெற்கு மாவட்டம் ஆலந்தூர் மேற்கு பகுதி தேமுதிக சார்பில் தேமுதிக கொடி நாள் விழா நடந்தது. இதில், பங்கேற்ற விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சைக்கிள், பெண்களுக்கு தையல் மிஷன்,இஸ்திரி பெட்டிகள், ஹெல்மெட், புடவைகளை வழங்கினார்.
பின்னர், அவர் பேசும்போது, ‘‘விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். அத்திவரதர் வந்து எப்படி பிரளயம் ஏற்பட்டதோ அதுபோல் தமிழக அரசியலில் விஜயகாந்தின் வருகையின்போது ஒரு பிரளயமே இருக்கும். விடுபட்ட நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறப் போவதால் தைரியமாக இருக்க வேண்டும். தேமுதிகவுக்கு இனி ஏறுமுகம்தான்.
இத்தேர்தலின் வெற்றியை விஜயகாந்த்திடம் சமர்ப்பிக்க வேண்டும். 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வரும்போது அனைத்து தொகுதிக்கும் வந்து அவர் எழுச்சியை உருவாக்குவார்.
நாட்டுக்கு ஒரு நல்ல தலைவர்தேவை. 2005-ல் தேமுதிக அறிவித்ததிட்டத்தை ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டிநிறைவேற்றினால் பாராட்டுகிறீர்கள். தேமுதிக சரியான நிலையை எடுக்கவில்லை என்று எங்களை குறை சொல்லாதீர்கள். மக்கள் சரியான நிலையை எடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுடையது” என்றார்.
இதைத் தொடர்ந்து அவர்செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியதாவது:
தேமுதிக தொடங்கியபோதே தனித்து போட்டியிட்ட கட்சி. அதனால் தேர்தல் நேரத்தில் கட்சியின் நிலைப்பாட்டை கட்சித் தலைவர், பொருளாளர் மற்றும் கட்சித் தலைமை அறிவிக்கும்.
மாநிலங்களவை எம்பி பதவி குறித்து அதிமுகவிடம் பேசப்பட்டதாக கட்சி பொருளாளர் தெளிவாகக் கூறியுள்ளார். இனி என்ன நடக்க உள்ளது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நடிகர்கள் ரஜினியும், கமலும் தனித்தோ இணைந்தோ நடிகர் சங்க தேர்தலைக்கூட எதிர்கொண்டது இல்லை. மக்கள் மன்றத்தில் தேர்தலில் நடிகர்கள் யார் வேண்டுமானாலும் வந்து ஜெயிக்கலாம். ஆனால் நல்ல மனசு இருந்து மக்களுக்கு ஏதாவது செய்திருக்க வேண்டும். இவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது’’ என்றார்.