Published : 02 Mar 2020 07:42 AM
Last Updated : 02 Mar 2020 07:42 AM
சிசிடிவி கேமராக்களை முழு அளவில் பராமரிக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்களை சென்னை பெருநகர் முழுவதும் பொருத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிசிடிவி கேமராக்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு சென்னை பெருநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்கள் சில இடங்களில் பழுதடைந்து காணப்படுவதாகவும், சில இடங்களில் செயல்படாமல் உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து சென்னை மாநகரில் பொது இடங்களில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் முழு அளவில் பராமரிக்கவும், சிறப்பாக இயக்கும்படி செய்யவும் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு, மாதவரம், தியாகராயநகர் உள்பட சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர்களும் இதற்கான நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT