Published : 02 Mar 2020 07:35 AM
Last Updated : 02 Mar 2020 07:35 AM
மழைநீர் வடிகால்களில் தூர் வாருவதற்காக ரூ.36 கோடியே 40 லட்சம் செலவில் அதிநவீன 7 தூர் உறிஞ்சு வாகனங்களை வாங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் 1,894 கி.மீ. நீளத்தில் 7,350 மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சுமார் 3 லட்சத்து 22 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு வண்டல்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.18 கோடி செலவிடப்படுகிறது.
இப்பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோருவது, ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்வது, அவர்களுக்கு பணிகள் வழங்குவது, அந்தப் பணிகளைக் கண்காணிப்பது, ஒப்பந்தங்களை வழங்குவதில் முறைகேடு புகார் வராமல் பார்த்துக் கொள்வது என பல்வேறு நிர்வாக சிக்கல்கள் உள்ளன.
தூர்வாரும் பணியில் இதுவரை, ஆள் நுழைவு குழி வழியாக ஆட்கள் இறங்கி தூர்வாரினர். இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் அவற்றில் கழிவுநீர்தான் தேங்கி உள்ளது. அதில் அவ்வப்போது ஏற்படும் அடைப்பு காரணமாக கழிவுநீர் சாலையில் ஓடி, அப்பகுதியில் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது.
இந்நிலையில், மழைநீர் வடிகால்களில் ஆட்களை இறக்காமல் இயந்திரம் மூலம் தூர்வார அதிநவீன வாகனங்களை வாங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி சார்பில், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் ரூ.36 கோடியே 40 லட்சம் செலவில் 7 அதிநவீன தூர் உறிஞ்சு வாகனங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ஒரு வாகனம் சென்னைக்கு வந்துள்ளது. மற்ற 6 வாகனங்கள் இம்மாத இறுதிக்குள் வந்துவிடும். இவற்றில் வடசென்னைக்கு 2 வாகனங்கள், மத்திய சென்னைக்கு 4 வாகனங்கள், தென்சென்னைக்கு ஒரு வாகனம் வீதம் வழங்கப்பட உள்ளன.
சாதாரணமாக, இயந்திரம் மூலம் மழைநீர் வடிகாலில் தூர்வார, முதலில் நீரை செலுத்தி தூரை மிருதுவாக்கிய பின்னர்தான் உறிஞ்ச முடியும். இதற்கு ஒரு நிமிடத்துக்கு 300 லிட்டர் நீர் தேவை. நாளொன்றுக்கு வாகனம் 5 மணி நேரம் இயங்கினால்கூட 90 ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படும். ஆனால் இந்த வாகனத்துக்கு 2 ஆயிரம் லிட்டர் நீர் இருந்தால் போதும்.
தூரில் உள்ள நீரையே மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் நவீன வசதி இந்த வாகனத்தில் உள்ளது. இப்பணிகளுக்காக நிலத்தடி நீரையோ, நிலமேற்பரப்பு நீரையோ பயன்படுத்துவது தவிர்க்கப்படுவதுடன், அதற்காக தனி வாகனம் இயக்க வேண்டிய அவசியமும் இல்லை.
இந்த வாகனங்களைக் கொண்டு தூர் வாருவதன் மூலம், மழைநீர் வடிகால்களில் நீர் தேங்காமல் வழிந்தோடி விடும். வடிகால்களில் கொசுக்கள் உற்பத்தியாவதும் தடுக்கப்படும். சுகாதாரமும் பாதுகாக்கப்படும்.
அனைத்து வாகனங்களும் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தூர்வாரும் பணியில் ஈடுபடுத்தப்படும். இதன் மூலம் இனிவரும் ஆண்டுகளில் மழைநீர் வடிகால்களில் தூர் வார வேண்டிய அவசியமில்லை. அதற்கு ஒதுக்கப்படும் நிதியை, வேறு அத்தியாவசியப் பணிகளுக்கு பயன்படுத்த முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT