Published : 01 Mar 2020 07:21 PM
Last Updated : 01 Mar 2020 07:21 PM

முதல்வராகும் வாய்ப்பைத் தவிர்த்த ஸ்டாலின்: கழகங்கள் இல்லா தமிழக கனவுக்கு வேட்டு வைக்கும் தலைவர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் இன்று. கருணாநிதியின் மறைவுக்குப்பின் திமுக தலைவராக, கூட்டணிக்கட்சிகளை இணைத்துக் கொண்டு ஜனநாயக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார். மிகப்பெரிய இயக்கத்தின் தலைவர் தனது மக்கள் பணியைச் செய்து வருகிறார். அவரைப்பற்றி சில வரிகள்.

திமுக தலைவர் ஸ்டாலினின் 67 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்த இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறைவு, பொதுச் செயலாளர் அன்பழகன் உடல் நிலை உள்ள நிலையில் பிறந்த நாள் விழாவை ஸ்டாலின் தவிர்த்துள்ளார். இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் ஸ்டாலின் போன்ற தலைவர் ஏன் தேவைப்படுகிறார் என்பதற்காக இந்தக்கட்டுரை.

ஸ்டாலின் மிகவும் பொறுமை மிக்க தலைவர், தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என அரசியலில் வாழ்ந்தவர், அது அவரை திமுக தலைவர் அளவுக்கு உயர்வதற்கு ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது.

இதை தொடங்கும்முன் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அப்போது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார், “ஒரு தந்தை என்ற முறையில் ஸ்டாலின் முன்னேற்றத்துக்கு நான் எந்தக் கடமையும் ஆற்றவில்லை. ஆனால், ஒரு மகன் என்ற முறையில் தனது கடமைகளைச் சரிவர ஆற்றி என்னைப் பெருமைப்பட வைத்திருக்கின்றான். இப்படி ஒரு மகன் கிடைத்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.” என்று கூறியிருந்தார்.

இதுதான் இன்றுள்ள திமுகவின் இரண்டாம் கட்டத்தலைவர்களின் ஆதங்கமாக உள்ளது. ஸ்டாலினை 2016-க்கு முன்னரே முதல்வர் வேட்பாளராக அறிவித்து கொண்டு வந்திருக்கவேண்டும் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் ஸ்டாலின் சரியான நேரத்தில் வரவில்லை என்றாலும் சரியான நேரத்தில் தலைவராக இருக்கிறார் என்பது மட்டும் தற்போதைய யதார்த்தம்.

திமுகவில் ஸ்டாலின் 1980 களில் முன்னிலைப்படுத்தப்பட்டாலும் சட்டப்பேரவையில் போட்டியிட 1984-ல்தான் முதல் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆயிரம் விளக்கில் செல்வாக்கு மிக்க அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமிக்கு எதிராக போட்டி. வெல்ல வேண்டிய நிலையில் எம்ஜிஆர் உடல் நிலை, இந்திரா மறைவு அதிமுகவுக்கு பெருவாரியான வெற்றியை தர ஸ்டாலினும் தோல்வியை தழுவினார்.

1989-ல் எம்ஜிஆர் மறைவுக்குப்பின் நடந்த தேர்தலில் அதே ஆயிரம் விளக்கில் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுகிறார். அடுத்து ஆட்சி கலைக்கப்பட ராஜிவ் மரணம் காரணமாக திமுக வெற்றி பெற முடியாத நிலை. 1996-ம் ஆண்டு சென்னையின் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட மேயராக பொறுப்பேற்றார். அப்போதுதான் ஸ்டாலினின் நிர்வாகத்திறன் வெளிப்பட்டது. சென்னையில் மேம்பாலங்கள் கட்டியது, சென்னையின் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டது போன்றவற்றை சொல்லலாம்.

அதன்பின்னர் 2001-ம் ஆண்டு சென்னை மேயராக மீண்டும் தேர்வு. ஸ்டாலின் வெற்றியை தடுக்க என்ன முயற்சி செய்தும் தடுக்க முடியவில்லை. அதன்பின்னர் இரட்டை உறுப்பினர் பதவி சட்டம் கொண்டு வரப்பட்டதால் மேயர் பதவியை துறந்தார். அதன்பின்னர் 2006-ம் ஆண்டு தேர்தல் ஸ்டாலினின் நிர்வாகத்தை தமிழகம் முழுதும் பார்த்தது. உள்ளாட்சித்துறை அமைச்சராக ஸ்டாலின் ஆற்றிய பணிகள் 5 ஆண்டுகள் அவர் சிறந்த நிர்வாகி என்பதை குறையின்றி அனைவரையும் கூறவைத்தது.

2011-ம் ஆண்டு கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரானார் ஸ்டாலின், 2016-ம் ஆண்டு ஸ்டாலினின் நமக்கு நாமே பிரச்சாரப்பயணம் ஜெயலலிதாவை அசைத்துப்பார்த்தது. அதன் விளைவு 89 இடங்களை கூட்டணியோடு சேர்த்து 98 இடங்களை திமுக பெற்றது.

ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவராக தொடர்கிறார். இந்த இடத்திற்கு வர ஸ்டாலின் எடுத்துக்கொண்ட ஆண்டுகள் 52. ஆனால் சில ஆண்டுகளில் கட்சியில் மேலே வந்தவர்கள் ஸ்டாலின் வாரிசு அரசியல் மூலம் வளர்ந்தார் என்ற குற்றச்சாட்டை வைப்பதுதான் தற்போதைய வேடிக்கை.

இதேப்பிரச்சினைதான் ஸ்டாலின் வளர்ச்சியை தடுத்தது. இதைத்தான் ஒரு தந்தையாக ஸ்டாலினுக்கு நான் பெரிதாக எதையும் செய்யவில்லை என சொல்ல வைத்தது. தமிழக அரசியலில் பல சோதனைக்களங்களை கண்டு கட்சியை வளர்த்துச் சென்றவர் திமுக தலைவர் கருணாநிதி. அவரது ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் ஸ்டாலின் வளர்ந்தாலும் அவரது மகன் என்கிற பார்வையே மற்றவர் அவரை கணிக்க வைத்தது.

அதன்படியே அவர்மீது விமர்சனமும் வைக்கப்படுகிறது. பேச்சாற்றல், எழுத்துப்பணி போன்றவற்றில் தந்தையுடன் ஒப்பிட்டு அவரை விமர்சிப்பது ஸ்டாலினின் தவறல்ல. யாரும் எட்டிப்பிடிக்க முடியாத ஆற்றலுக்கு சொந்தக்காரரான கருணாநிதியின் திறமையை எல்லோரும் எப்படி கைகொள்ள முடியும் என்பது கற்றறிந்தோருக்கு விளங்கும்.

ஸ்டாலின் திறமைமிக்க தலைவர் என்பதைத்தாண்டி கருணாநிதியுடன் ஒப்பிட்டு அவரை சிறுமைப்படுத்தும் சிலர் மேயராக, துணை முதல்வராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக ஸ்டாலினின் திறமை மிக்க நிர்வாகத்திறன் குறித்து எதுவும் சொல்ல முடியாத அளவுக்கு அவரது பணி இருந்தது.

கட்சியிலும் சாதாரண கோபாலபுரம் மாணவர் திமுகவை உருவாக்கி, திமுகவின் கொள்கைகளை விளக்கும் நாடகம் போட்டது, திமுகவில் கட்சி அமைப்புகளில் சிறிய சிறிய பொறுப்புகளில் பதவி வகித்தது, தமிழகத்தில் இடதுசாரி இயக்கங்களுக்கு அடுத்து இளைஞர் அமைப்பை முதன்முதலாக 1980-ல் தொடங்கி அதன் தலைமை ஏற்று வளர்த்தது, அன்பகம் என்கிற திமுக தலைமை இடத்தை இளைஞரணிக்கு பெற்றுத்தந்தது என வளர்ந்தவர் திமுகவின் பொருளாளர் என்கிற மிகப்பெரிய பொறுப்புக்கு உயர்த்தப்பட்டார்.

பல தலைவர்கள் இருந்தாலும் கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் ஸ்டாலின் அடுத்த தலைவராக வளர்ந்து வந்தார். 2016-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு நிகரான தலைவராக தமிழகத்தில் எதிரணியில் நின்றார். சிறிய மாற்றம் நிகழ்ந்திருந்தாலும் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும். ஆனால் 2014-ம் ஆண்டும், 2016-ம் ஆண்டும் காங்கிரஸ் மற்றும் தேமுதிகவை அணுகிய விதத்தில் நடந்த சில குளறுபடி காரணமாக இரண்டுமுறையும் வாய்ப்புத்தவறிப்போனது.

2016-ம் ஆண்டு திமுக பெற்ற வெற்றி 2011 தோல்வியைவிட பெருவெற்றிதான் ஆனாலும் அதன் தோல்வியை வைத்து வரும் விமர்சன அம்புகளும் ஸ்டாலினை நோக்கியே பாய்ந்தது. ஆனால் 2016-ம் ஆண்டுக்குப்பின் திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் காரணமாக ஓய்வுநிலைக்கு தள்ளப்பட்டதும், பெரிய கட்சியான திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் கருணாநிதி, ஜெயலலிதா என்கிற தலைவர்களின் மறைவுக்குப்பின் இல்லா நிலை உருவாகும் என்று பலரும் கணக்குப்போட திமுக எனும் கட்சியை ஒருமுகப்படுத்தும் அச்சாணியாக ஸ்டாலின் செயல் தலைவரானார். அப்பா அளவுக்கு இல்லை, கோபக்காரர், அனைவரையும் ஒருமுகப்படுத்த முடியாது, சிறந்த பேச்சாளர் இல்லை என்றெல்லாம் அவரை விமர்சித்தவர்கள் குறித்து அவர் கவலைப்பட்டதில்லை.

திமுகவில் கருணாநிதிக்குப்பின் நம்பிக்கைமிக்க தலைவரானார் ஸ்டாலின். கருணாநிதி இல்லாத திமுக, கடந்த கடினமான அரசியல் பாதையில் மூத்த தலைவர்களையும், இளையோரையும் ஒருங்கிணைத்து திமுகவை வழி நடத்தினார். கருணாநிதியின் மறைவுக்குப்பின் அதே உறுதியாக திமுகவின் அடுத்தக்கட்ட தலைமையாக தானாக அடுத்த நகர்வு அவரை தேடி வந்தது. பெரிய அளவில் எதிர்ப்பு இருக்கும் என நினைத்த நேரத்தில் எளிதாக தலைவர் பதவியை ஏற்றார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவின்போது அவரை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் பெற அவர் நடத்திய சட்டப்போராட்டமும், அதற்கு முன்னர் தனது நிலையை விட்டு இறங்கி தந்தைக்காக ஆளும் தரப்பிடம் சமாதானம் பேசியபோதும் ஸ்டாலினின் மதிப்பு உயர்ந்தது, தாளவில்லை. சட்டப்போராட்டத்தில் வென்றுக்கொடுத்த வில்சன் எம்பியாக்கப்பட்டதன் மூலம் அந்த நிகழ்வை ஸ்டாலின் எப்படி பார்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

.

இன்றைய காலக்கட்டம் அரசியலில் விமர்சனம் என்பதைத்தாண்டி அவதூறு பேசுவதுதான் அரசியல் என்ற நிலையை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறது. அதில் ஸ்டாலின் அதிகமாக விமர்சிக்கப்படுகிறார். அதில் ஒன்று அவர் எந்நாளும் முதல்வராக முடியாது என்பதை குறிப்பிட்டு அவர் முதல்வர் பதவிக்கு வரவே இயலாத நிலை உள்ளது என்று விமர்சிக்கப்படுகிறது. ஆனால் 98 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த ஒருவர் எளிதாக மத்திய அரசுடன் இசைவாக போயிருந்தால் இந்நேரம் முதல்வராகியிருக்க முடியும்.

ஆனால் இயற்கையாகவே திராவிட இயக்க அரசியலில் ஊறிய அவரும் திமுகவும் அந்தப்பாதையை தேர்வு செய்யவில்லை. ஆட்சியைக்காப்பாற்ற எதையும் செய்யலாம், அப்படி எதையும் செய்பவர்களின் அரசியலே சிறந்தது, சரி என நினைப்பவர்களால், ஸ்டாலின் முதல்வர் பதவிக்காக காத்திருக்கும் இலவுக்காத்தக்கிளி என விமர்சிக்கப்படுவதுதான் வேடிக்கை.

தந்தையைப்போல பெரிய பேச்சாளர் இல்லாவிட்டாலும் நிர்வாகத்திறனில் கட்சியை தந்தைக்குப்பின் அதுவும் மிக இக்கட்டான காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லாத கட்சியை ஒற்றை அச்சாணியாக ஸ்டாலின் நிர்வாகித்து வருவது எதிராளியும் மறுக்க முடியாத உண்மை. மறுபுறம் தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஸ்டாலின் ஆரம்பத்திலேயே சவாலை சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

தொடர்ச்சியான பல மக்கள் விரோத திட்டங்களுக்காக மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராடவேண்டிய சூழ்நிலை, இதில் ஸ்டாலின் முன்னர் இருந்த நிலையை மாற்றி தந்தையைப்போல் ஒரு நிதானப்பட்ட தலைவராக கூட்டணிக்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் வெற்றிக்கண்டுள்ளார்.

இதன்மூலம் தமிழகத்தில் கழகங்கள் இல்லா தமிழகம் என்கிற கோஷத்தை உடைக்கும் முயற்சிக்கு ஸ்டாலினின் தலைமை மிகப்பெரிய இடையூறாக உள்ளது எனலாம். மறுபுறம் திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கங்கள் தூக்கிப்பிடித்த வெகுஜன பிரச்சினை, மதச்சார்ப்பற்ற அரசியல், மக்கள் விரோத அரசியலை ஸ்டாலின் உறுதியாக முன்னெடுத்துச் செல்வதன்மூலம் இந்தக்காலக்கட்டத்தில் திமுகவை வலுப்படுத்தி வந்துள்ளார் என்றே சொல்லலாம்.

திமுக வெற்றிக்கு மிகப்பெரிய இடையூறாக 2016-ல் திகழ்ந்த இடதுசாரிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அதன் ஜனநாயக அரசியல் அறிந்து கோபப்படாமல் பக்குவப்பட்ட தலைவராக திமுகவுடன் இணைத்துக்கொண்டு மக்களுக்கான போராட்டத்தில் செல்லும் பாங்கு சிறந்த தலைவனுக்குரிய பாங்கு என்றே சொல்லலாம்.

அதேப்போன்று திமுகவில் தனது வளர்ச்சிக்கு இடையூறு என சொல்லப்பட்ட வைகோ, மதிமுகவை தொடங்கியதும், மக்கள் நலக்கூட்டணி அமைக்க முன் முயற்சி எடுத்ததும், பொது எதிரியான தலைவர் என்பதைத்தாண்டி தனிப்பட்ட விரோதியாகவும் பார்க்கும் சூழல் அமைந்தும், அவரையும் தன்னோடு அரவணைத்து செல்லும் பாங்கு.

நீங்கள் நிச்சயம் நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும் அதனால் ராஜ்யசபா எம்பியாக செல்லுங்கள் என வைகோவை அன்புக்கட்டளை இட்டு எம்பியாக்கியதும் ஸ்டாலினின் பண்புக்கு எடுத்துக்காட்டு. கமல்ஹாசனின் கட்சியையும் இணைத்துச் செல்ல அழைப்பு விடுத்ததும் அவரது பக்குவ அரசியலை காட்டுகிறது.

வழக்கமான திமுகவாக இல்லாமல் வேறு வகைகளில் காலத்திற்கேற்றார்போல் பயணிக்க விரும்புவதை காணமுடிகிறது, கிராம சபை கூட்டங்களை நடத்தியது, கட்சிக்குள் கள ஆய்வுக் கூட்டம் நடத்தியது ஸ்டாலினை வலுவான தலைவராக அடுத்தக்கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்ல உதவியுள்ளது. தந்தையின் நிதான அரசியலுக்கு நிகராக தன்னை உயர்த்திக்கொண்டுள்ளார் ஸ்டாலின்.

அதன்பலன் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஸ்டாலின் தலைமையில் பெற முடிந்தது. கூட்டணிக்கட்சிகளை கையாண்ட விதமும், அகில இந்திய அளவில் திமுகவின் பங்களிப்பை கொண்டுச் சென்ற விதமும் ஸ்டாலினுக்கு மரியாதையைக் கூட்டி இந்தியாவின் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவராக தன்னை உயர்த்திக் கொண்டதை காணமுடிகிறது. தமிழகம் தாண்டி தேசியத் தலைவராக ஸ்டாலின் உயர்வதற்கான வாய்ப்பு 2019 பொதுத் தேர்தலில் கிடைத்தது. இனியும் கிடைக்கும்.

இன்றைய சூழலில் திமுக என்கிற இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய இயக்கமாக உள்ளது. அதன் தலைவராக ஸ்டாலின் வழிநடத்திச் செல்கிறார். அதிமுக ஆட்சியை கவிழ்த்து அதன்மூலம் தான் முதல்வராக வர விரும்பவில்லை என ஸ்டாலின் சொன்னதன் அர்த்தம், சாதாரணமாக அனைத்து கூட்டணிக்கட்சிகளையும் ஒதுக்கிவிட்டு மத்தியில் நட்புக்கரம் நீட்டியவர்களுடன் கரம் கோர்த்திருந்தால் முதல்வர் கனவு நனவாகியிருக்கும் அதை ஸ்டாலின் செய்ய நினைக்கவில்லை என்கின்றனர் திமுகவில் உள்ள தலைவர்கள். இதை மறுக்கமுடியாது.

காரணம் திமுக எந்த வழியில் பயணிக்கவேண்டும் என்பதை மூத்த தலைவர்கள் காட்டிய வழியில் ஸ்டாலின் பயணிப்பது அவரது தலைமைப்பண்பைக்காட்டுகிறது. முதல்வராக 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்லவே ஸ்டாலின் வியூகம் வகுத்துவருகிறார். முதல்வர் பதவி தேடி வரும் வராவிட்டாலும் திமுக ஒரு சமூகநீதி இயக்கம் அதன் தலைவராக ஸ்டாலின் தனது பணியைத் தொடர்வார் என்கின்றனர் அவரது கட்சியினர்.

மனிதன் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தனக்கு கிடைக்கும் அனுபவத்தால் பண்படுகிறான், தலைவனும் அப்படியே ஸ்டாலினும் தமிழகத்தில் இன்றுள்ள நிலையில் பக்குவப்பட்ட தலைவராக கூட்டணிக்கட்சிகளை அரவணைத்துச் செல்லும் ஜனநாய கட்சியின் தலைவராக மாற்றமடைந்து வருகிறார்.

இந்த மாற்றம் அவரை நிச்சயம் தமிழகத்தையும் வழி நடத்திச் செல்லும் முதல்வராக மக்கள் அமர்த்தும் வாய்ப்பைக் ஒருநாள் கொடுக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x