Published : 01 Mar 2020 04:09 PM
Last Updated : 01 Mar 2020 04:09 PM
டெல்லி கலவரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்திட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் மார்ச் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. டெல்லி கலவரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்திடுக!
டெல்லியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கப்பட வேண்டும். கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட சொத்துகளை மதிப்பீடுசெய்து உரியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கலவரத்தைத் தூண்டியவர்கள் மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
2. தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கையைக் கைவிடுக:
தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி)நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதில்லை என்று சொல்லிக்கொண்டே அதில் கேட்கப்பட வேண்டிய பெற்றோர் குறித்த கேள்விகளையெல்லாம் தேசிய மக்கள் தொகை பதிவேடு( என்.பி.ஆர்) வினாக்களுக்குள் சேர்த்து அதையே என்.ஆர்.சி ஆக பாஜக அரசு உருமாற்றி இருக்கிறது .
எதிர்வரும் 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியா முழுவதும் என்பிஆர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறது இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதன்பின்னர் கோடிக்கணக்கான மக்கள் குடியுரிமையைப் பறி கொடுப்பது தவிர்க்க முடியாததாகி விடும். எனவே என்பிஆர் நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் எனத் தமிழக அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று இந்த மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
3. இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்க!
“இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல; இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று அரசாங்கத்துக்குக் கட்டாயம் எதுவும் இல்லை" என அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மிக மோசமான தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது. இது பட்டியல் இனத்தவரின் இடஒதுக்கீட்டு உரிமையை மட்டுமல்ல தற்போது இட ஒதுக்கீடு பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்குமே பொருந்தக் கூடியதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவம் என்ற உறுப்புக்கு இது நேர் எதிரானதாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவையே சிதைத்து இந்திய சமூகத்தை மீண்டும் ஏற்றத்தாழ்வு கொண்ட சமூகமாக கட்டமைக்கும் ஆபத்து இந்தத் தீர்ப்பில் இருக்கிறது. இதை எதிர்த்து மத்திய அரசு இதுவரை சீராய்வு மனு தாக்கல் செய்யாதது பாஜக அரசும் இதில் உடந்தை என்பதை வெளிப்படுத்துகிறது. இட ஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாப்பதில் தமிழகத்துக்கு எப்போதுமே தனித்துவமான இடம் உண்டு.
69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் அதற்கான சட்டத்தை சேர்க்க வைத்தவர் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆவார். அவர் வழியில் நின்று ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு தற்போது இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலைக் களைவதற்கு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்த செயற்குழுவின் மூலமாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
4. வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுக்க சட்டம் இயற்றுக:
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு நாடெங்கும் வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாஜகவின் முன்னணித் தலைவர்களே வெறுப்புப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி கலவரத்துக்கு இத்தகைய வெறுப்புப் பேச்சுகளே காரணம் என்று சுட்டிக்காட்டிய டெல்லி உயர்நீதிமன்றம் அப்படி பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருக்கிறது.
இனப்படுகொலைகள் நிகழ்வதற்கு வெறுப்புப் பிரச்சாரமே தூண்டுகோலாக அமைகிறது என்பதை உலக அளவில் பார்த்து வருகிறோம். இதை உணர்ந்துதான் உச்சநீதிமன்றம் வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுப்பதற்கு புதிய சட்டம் ஒன்றை இயற்றவேண்டுமென மத்திய அரசை அறிவுறுத்தியதோடு,அதற்கான மசோதா ஒன்றைத் தயாரித்துத் தருமாறு 2013 ஆம் ஆண்டு இந்திய சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
அதனடிப்படையில் அந்த மசோதாவை தயாரித்து 2017ஆம் ஆண்டு சட்ட ஆணையம் மத்திய அரசிடம் வழங்கிவிட்டது. அந்த சட்ட மசோதாவை மத்திய அரசு இதுவரை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது . வெறுப்புப் பேச்சுகளும், வெறுப்புக் குற்றங்களும் அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக சட்ட ஆணையம் தயாரித்துத் தந்த அந்த மசோதாவைப் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும், அதை சட்டமாக்க வேண்டும்.
இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT