Published : 01 Mar 2020 09:16 AM
Last Updated : 01 Mar 2020 09:16 AM
‘‘தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு பணிகள் தொடர்பான முழு அறிக்கையை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. ஆய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும்’’ என்று தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகைகளை 50 சதவீதம் தமிழில் வைப்பதற்கான சட்டம் உள்ளது. இதை கடைபிடிக்காதோர் மீது அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது. இந்த அபராதத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளின் முழு அறிக்கையை மத்திய அரசு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையிடம் ஒப்படைத்துள்ளது. ஆய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மேலும், ஆதிச்சநல்லூரில் விரைவில் அகழ் பாதுகாப்பகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்படும். அந்நேரம் ஆய்வறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
லெமூரியா கண்டம்
லெமூரியா கண்டம் குறித்த அகழாய்வு உலகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும். இதனை மத்திய அரசு மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
கடல்சார் தொல்லியல் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெளியாகலாம். இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT