Published : 29 Feb 2020 06:05 PM
Last Updated : 29 Feb 2020 06:05 PM
வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரம் மிகப்பெரிய அச்சத்தை தருகிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று(பிப்.29) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, வேலைவாய்ப்பின்மை, தொழிற்சாலை மூடுதல், அந்நிய நாட்டு மூலதனம் வராதது, உற்பத்தி தொழிற்சாலைகள் தங்களுடைய உற்பத்தியை குறைத்துள்ளது, கட்டுமான பணிகள் முடங்கியுள்ளது, மக்களுக்கு கொடுத்த திட்டம் ஒன்றையும் மத்திய அரசு நிறைவேற்றாதது ஆகியவைதான் தற்போதைய நிலவரங்களுக்கு முக்கிய காரணம்.
இதில் இருந்து மக்களை திசை திருப்ப மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
இதனால் பல மாநிலங்களில் கலவரம் நடந்து வருகிறது. டெல்லியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தாய்மார்கள் தாக்கப்பட்டது மிக கொடுமையான செயலாகும். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின் விளைவு 40-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர்.
அப்பாவி மக்கள்மீது வெறித்தனமாக தாக்கியதால், டெல்லி ரத்த களறி ஆகிவிட்டது.
தாய்மார்கள் கணவனை இழந்து படும் இன்னல்களை பார்க்கும்போது இந்தியா ஜனநாயக நாடா? என்ற கேள்விகுறி எழுந்துள்ளது. இதன் மூலம் மத்திய ஆட்சியாளர்களால் தூண்டி அமைதியான போராட்டத்தை நிலை குலைக்க செய்திருப்பது தெரிகிறது.
டெல்லியில் இப்படி கலவரம் ஏற்பட்டிருப்பது மிக பெரிய அச்சத்தை தருகிறது. 2 தினங்களுக்கு முன்பு குடியரசு துணை தலைவர் வெங்கைய்ய நாயுடு புதுச்சேரி பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க புதுச்சேரி வந்திருந்தார். அவரிடம் பல்கலைக்கழகத்தில் அனைத்து துறைகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீட்டை தர வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளேன். பல்கலைக்கழக வேந்தராக உள்ள அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மத்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரியில் இருந்து இலங்கை ஜாப்னாவுக்கு தனியார் மூலம் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பதாகவும், அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். நானும் உறுதுணையாக இருப்பதாக உறுதியளித்துள்ளேன்.
இதன் மூலம் புதுச்சேரிக்கு பயணிகள் வருகை அதிகரிக்கும். முதன்முறையாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல்விடப்பட உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகளை செய்து வருகின்றோம். விரைவில் தொடங்கும். அதுபோல் புதுச்சேரி வந்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்து ஏற்கனவே புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களிலும் ரூ.700 கோடியில் புதிய சுற்றுலா திட்டங்களுக்காக முதல் கட்ட நிதி ஒதுக்கி வேலைகள் நடந்துள்ளது. அதற்கு இரண்டாம் கட்டமாக ரூ.200 கோடியை ஒதுக்கித்தரும்படி கேட்டு கொண்டோம். அவரும் விரைவில் தருவதாக ஒப்புதல் அளித்துள்ளார்.
காரைக்கால் என்ஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்திருந்த மத்திய அமைச்சர் நிதின்கட்காரி புதுச்சேரி தலைமை செயலக வளாகத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் ஒப்புதல் அளித்த விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டிணம் வரை 4 வழிச்சாலைக்கு நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ரூ.926 கோடி மதிப்பிலான அந்த வேலை தொடங்குகின்ற நிலையில் உள்ளது. அதை விரைவுப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டேன். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெற தாக்கல் செய்த மனுவில், ஒப்புதல் பெற்று துரிதமாக தொடங்குவதாக உறுதியளித்துள்ளார்.
அதுபோல் ரூ.800 கோடியில் மகாபலிபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல், நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி நகர பகுதிக்குள் வந்தால் வீடுகள் பாதிக்கும் என்பதால் புதுச்சேரி அருகில் ஆரோவில் வழியாக வில்லியனூர், ஆரிய பாளையம் பகுதியில் 45 ஏ விழுப்புரம்-நாகப்பட்டிணம் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்க ஆலோசனை கூறினோம். அதையும் ஏற்றுக்கொண்டார்.
ரூ.130 கோடியில் மதகடிப்பட்டில் இருந்து புதுச்சேரி வரை 4 வழிச்சாலை அமைக்க வரைபடம் தயாரித்து கொடுத்துள்ளோம். இதில் சங்கராபரணி ஆற்றில் ஆரியபாளையத்தில் புதியதாக பாலம் கட்டுவதும் இடம் பெற்றுள்ளது. இத்திட்டத்திற்கான பணி மதகடிப்பட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்தால் நெரிசலை தவிர்க்க முடியும். இதற்கும் மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
குறிப்பாக கடலூரில் இருந்து நகரபகுதி வர சுமார் 45 நிமிடம் ஆகின்றது. ஆகவே அமைச்சரிடம் முருங்கப்பாக்கம் பாலத்தில் இருந்து சிவாஜி சிலை வரை எக்ஸ்பிரஸ் வே (துரிதசாலை) திட்டம் மூலம் முழுமையான மேம்பாலம் கட்ட கேட்டு கொண்டேன். 9 கிலோ மீட்டர் வருகின்றது. இதற்கு ரூ.300 கோடி செலவு ஆகும். இதனால் எந்தெந்த இடங்களில் மேம்பாலம் கட்ட முடியுமோ அங்கு மேம்பாலம் கட்டவும், எங்கு சாலைகள் அகலப்படுத்த முடியுமோ அங்கு அகலப்படுத்தவும் கேட்டு கொண்டார். முருங்கப்பாக்கம், நைணார்மண்டபம் பகுதியில் பாலங்கள் கட்டப்படும், மீதி இடத்தில் அகலப்படுத்தப்படும். அதனால் கடலூர் சென்னை செல்ல நெரிசலில் சிக்காமல் செல்வார்கள். நல்ல அறிவிப்பை கொடுத்துள்ளார்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT