Published : 29 Mar 2014 09:35 AM
Last Updated : 29 Mar 2014 09:35 AM

மின்சாரம் இருந்தால்தானே மின்வெட்டு: உதகையில் ஸ்டாலின் பேச்சு

ஆட்சி பொறுப்பேற்றதும் மின்வெட்டே இருக்காது என்றார் ஜெயலலிதா. தற்போது மின்சாரமே இல்லை என்று உதகையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை குன்னூர், உதகை பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் ஸ்டாலின் பேசியதாவது:

நாங்கள் தேர்தலுக்காக மட்டும் மக்களிடம் வருபவர்கள் இல்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களை பற்றி சிந்திப்பவர் கருணாநிதி. இதற்கு நேர் மாறாக உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் சீசனுக்கு சீசன் வருவதுபோல, தேர்தலுக்கு தேர்தல் வருபவர் ஜெயலலிதா.

முதல்வருக்கு பாதுகாப்பு தேவைதான். போயஸ் தோட்டத்திலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லும் வழியில் பாதுகாப்பு போடலாம். அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்றால், கீழே எதற்கு பாதுகாப்பு.

கருணாநிதி 5 முறை ஆட்சி செய்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான ஆட்சியில் கருணாநிதி கொண்டுவந்த திட்டங்களை எந்த முதல்வரும் நிறைவேற்ற முடியாது.

ஆட்சி பொறுப்பேற்றதும் மின்வெட்டே இருக்காது என்றார் ஜெயலலிதா.தற்போது மின்சாரமே இல்லை. மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும், தற்போது மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. கருணாநிதி ஐந்தாண்டுகள் பேருந்து கட்டணத்தை உயர்த்தவே இல்லை.

நெற்றியில் 111

போலீஸ் உதவிக்கு 100, தீயணைப்பு நிலையத்துக்கு 101, விபத்து ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 என்ற எண்களை அழைக்க வேண்டும். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், ஜெயலலிதா அறிக்கைகளை வாசிக்கிறார். இது மக்களின் நெற்றியில் 111 என போடுவதற்குதான் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x