Published : 29 Feb 2020 09:33 AM
Last Updated : 29 Feb 2020 09:33 AM
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்காக ரூ.161 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மரக்காணம் பக்கிங்காம் கால்வாய் அருகில் கந்தாடு, வட அகரம், வண்டிப்பாளையம், தேவிகுளம், ஆத்திக்குப்பம், காளியாங்குப்பம், கூனிமேடு, செய்யாங்குப்பம், கோட்டிக்குப்பம், ஊரணி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், மணிலா, தர்பூசணி, தென்னை, கேழ்வரகு, கரும்பு போன்ற பயிர்கள் நடவு செய்யப்படுகிறது. இப்பகுதியில் சிறப்பாக நடைபெற்று வந்த விவசாய தொழில், தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைதல், விளைநிலம் உவர் நிலமாக மாறுதல் போன்ற காரணங்களால் நலிவடைந்துள்ளது.
இங்குள்ள பக்கிங்காம் கால்வாயில் கந்தாடு ஊராட்சிக்கு உட்பட்ட முதலியார்பேட்டைக்கும், மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட காக்காப்பள்ளம் கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கால்வாயின் குறுக்கே 50-க்கும் மேற்பட்ட கதவுகள் அமைத்து சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இப்பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நேரங்களில் கடல் நீரானது முகத்துவாரம் வழியாக பக்கிங்காம் கால்வாய்க்கு செல்கிறது. இந்த உப்பு நீரானது விளைநிலங்களில் கலக்காமல் இங்குள்ள தடுப்பணையிலேயே தடுத்து நிறுத்தப்படும்.
மேலும், பருவமழை காலத்தில் பெய்யும் மழை நீரானது வீணாக கடலில் சென்று கலக்காமல் தடுப்பணையின் தெற்கு பகுதியில் பாதுகாப்பாக தடுத்து நிறுத்தப்படுவது வழக்கம். இதுபோல் தடுத்து நிறுத்தப்படும் மழைநீரால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துவிடும். மேலும், இந்த நீரையே பல கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் தொட்டி ஏற்றம் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதனால் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயமும் சிறப்பாக நடைபெற்று விவசாயிகளின் வாழ்க்கையும் உயர்ந்துள்ளது. ஆனால், இவ்வளவு சிறப்புமிக்க தடுப்பணையை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு சரியான முறையில் பராமரிக்கவில்லை. இதனால் தடுப்பணை முற்றிலும் சிதிலம் அடைந்துள்ளது.
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்துள்ள தடுப்பணையை சரிசெய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி மரக்காணம் அருகே கந்தாடு மற்றும் வண்டிப்பாளையம் ஆகிய இடங்களில் கழுவேலி ஏரியில் தேங்கி நிற்கும் நீரை நன்னீராக மாற்றி சென்னை மாநகர் பொதுமக்களுக்கு குடிநீர் பயன்பாட்டுக்காகக் கொண்டு செல்வதற்கான திட்டப் பணிகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்பு கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்தியகோபால்.ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினார். .
இந்நிலையில், இங்குள்ள பக்கிங்காம் கால்வாயில் புதிய தடுப்பணை கட்டி அதில் மழைநீரைத் தேக்கி சென்னைக்குக் குடிநீர் எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் ரூ.161 கோடியை ஒதுக்கி அதற்கான அரசாணையையும் நேற்று (பிப்.28) தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT