Published : 29 Feb 2020 09:07 AM
Last Updated : 29 Feb 2020 09:07 AM

ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் மாவட்ட தனித்துணை ஆட்சியர் ஓட்டுநருடன் கைது

தனித்துணை ஆட்சியர் தினகரன்

வேலூர்

50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வேலூர் மாவட்ட முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியரை அவரது ஓட்டுநருடன் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகேயுள்ள இரும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (31), விவசாயி. இவர் தனது தந்தை முருகன் மற்றும் அத்தை மகன் ராஜவேலு ஆகியோர் பெயரில் இருக்கும் 1.47 ஏக்கர் பூர்வீக விவசாய நிலத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கண்ணமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதற்காக அரசின் நில வழிகாட்டு மதிப்பின்படி பத்திரங்களை வாங்கி பதிவு செய்துள்ளார்.

ஆனால், இந்த முத்திரை கட்டணம் குறைவு எனக்கூறி கண்ணமங்கலம் சார் பதிவாளர் மணிகண்டன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேல் முறையீட்டுக்காக வேலூர் மாவட்ட முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியருக்கு அனுப்பியுள்ளார். மேலும், நிலத்துக்கான பத்திரத்தையும் அவர் ரஞ்சித்குமார் வசம் விடுவிக்காமல் நிறுத்தி வைத்தார்.

இதற்கிடையில், குறை முத்திரைக் கட்டணம் புகார் தொடர்பாக ரஞ்சித் குமாருக்கு வேலூர் மாவட்ட முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியர் தினகரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தினகரனின் அலுவலகத்துக்குச் சென்ற ரஞ்சித் குமார், குறை முத்திரைக் கட்டணம் புகார் குறித்துப் பேசியுள்ளார்.

அப்போது, குறை முத்திரை கட்டண விவகாரத்தை சுமூகமாக முடிப்பதுடன் பத்திரத்தை விடுவிக்க ரூ.50 ஆயிரம் பணத்தை தனக்கு லஞ்சமாக அளிக்க வேண்டும் என தினகரன் கேட்டுள்ளார். இவ்வளவு தொகையை அளிக்க முடியாமல் ரஞ்சித் குமார் அமைதியாகி விட்டார்.

இதற்கிடையில், தினகரன், வேலூர் மாவட்ட அலுவல் ஆய்வுக்குழு அலுவலராக கடந்த ஜனவரி மாதம் இறுதியில் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அந்த பதவிக்குச் செல்லாமல் இதே பதவியில் தொடர்ந்துள்ளார். மேலும் குறை முத்திரைக் கட்டணம் தொடர்பாக வரப்பெற்றுள்ள புகார் மனுக்களின் நிலுவையில் உள்ள கோப்புகள் அனைத்தையும் விரைந்து முடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

இதற்காக, திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த தனது கார் ஓட்டுநர் ரமேஷ்குமார் (44) என்பவர் மூலமாக அனைவரையும் செல்போனில் தொடர்புகொண்டு நிலுவையில் இருக்கும் கோப்புகளை முடித்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். ரஞ்சித் குமாருக்கும் இதே தகவலை ஓட்டுநர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தினகரனை சந்தித்து தனது பிரச்சினையை முடிக்கும்படி ரஞ்சித் குமார் கேட்டுள்ளார். அப்போது, பணத்தை கொடுத்தால் பிரச்சினை இருக்காது என்றும் இல்லாவிட்டால் அபராதத் தொகை அதிகமாக செலுத்த நேரிடும் எனவும் தினகரன் கூறியுள்ளார். வேறு வழியில்லாமல் அவர் கேட்டபடி ரூ.50 ஆயிரம் பணத்தைக் கொடுக்க ரஞ்சித்குமார் ஒப்புக்கொண்டார். இருந்தாலும் பணத்தைக் கொடுக்க மனமில்லாமல் வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின்பேரில், அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்தனுப்பினர். மேலும், அவரை பின்தொடர்ந்தனர். அந்தப் பணத்தைக் கொடுக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ரஞ்சித்குமார் நேற்று (பிப்.28) இரவு சென்றார். அலுவலகத்தில் அவர் இல்லை. செல்போனில் தொடர்புகொண்டபோது குடியாத்தம் பகுதியில் ஆய்வுக்காக சென்றிருப்பதால் வருவதற்கு தாமதமாகும் என்று கூறியதுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகேயுள்ள ஏடிஎம் மையம் அருகில் காத்திருக்கும்படி தினகரன் கூறியுள்ளார்.

கார் ஓட்டுநர் ரமேஷ்குமார்

நேற்று இரவு பத்து மணியளவில் அவரது சொந்த காரில் ஓட்டுநர் ரமேஷ்குமாருடன் வந்த தினகரன், பணத்துடன் காத்திருந்த ரஞ்சித் குமாரை தனது காரில் ஏற்றிக்கொண்டார். இதைப் பார்த்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அந்த காரை பின்தொடர்ந்தனர். காரில் இருந்தபடி ரூ.50 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்ட தினகரன், புதிய பேருந்து நிலையம் அருகே அவரை இறக்கிவிட்டுச் சென்றார். பணத்தை தினகரன் வாங்கிவிட்டார் என்பதை ரஞ்சித் குமார் மூலம் போலீஸார் உறுதி செய்துகொண்டதும் அந்த காரை மீண்டும் பின்தொடர்ந்தனர். வேகமாகச் சென்ற காரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமார் 3 கி.மீ். தொலைவுக்கு விரட்டிச் சென்று வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் மடக்கிப் பிடித்தனர்.

காருடன் அவரை அருகில் இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி தேவநாதன் தலைமையில் ஆய்வாளர்கள் ரஜினிகாந்த், விஜய், விஜயலட்சுமி தலைமையில் விசாரணை நடைபெற்றது. மேலும், தினகரனின் காரை சோதனையிட்டதில் ரஞ்சித் குமாரிடம் வாங்கிய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் கணக்கில் வராத பணம் மொத்தம் ரூ.2.44 லட்சம் இருந்தது தெரியவந்தது. இந்தப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், தனித்துணை ஆட்சியர் தினகரன் மற்றும் அவரது ஓட்டுநர் ரமேஷ்குமாரையும் இன்று (பிப்.29) அதிகாலை கைது செய்தனர்.

விழா அனுமதிக்கு லஞ்சம்

வேலூர் மாவட்ட முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியர் தினகரன் (47). இவர் கடந்த ஒன்றரை மாதமாக புதிதாக ஏற்படுத்தப்பட்ட குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் பணியை கூடுதலாக கவனித்து வந்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடத்த வருவாய் துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர். அதன்படி எருதுவிடும் விழா நடத்தும் பகுதிகளை வருவாய் கோட்டாட்சியர் என்ற முறையில் தினகரன் தான் நேரில் ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும். இந்த ஆய்வின்போது லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டே அவர் அனுமதி அளித்து வந்துள்ளார்.

தனி வாகன ஓட்டுநர்

துணை ஆட்சியருக்கு அரசு வழங்கிய வாகனத்துடன் ஓட்டுநர் ஒருவருக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், அரசு ஓட்டுநரைவிட தினகரனின் சொந்த வாகன ஓட்டுநரான ரமேஷ்குமார் தான் அதிக நேரம் உடனிருப்பார். தினகரனின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் என்பதால் தனது சொந்த ஊரைச் சேர்ந்த ரமேஷ்குமாரை தனது ஆஸ்தான வாகன ஓட்டுநராக நியமித்து மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கி வந்துள்ளார். தினகரன் வாங்கும் லஞ்சப்பணம் விவகாரம் முழுவதையும் ரமேஷ்குமார்தான் கையாண்டுள்ளார் என்று காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓட்டுநருடன் கைதான தினகரன் கடந்த ஒரு மாதத்தில் எவ்வளவு கோப்புகளை பணம் பெற்றுக்கொண்டு முடித்துள்ளார் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x