Published : 29 Feb 2020 07:47 AM
Last Updated : 29 Feb 2020 07:47 AM

அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் வழங்கும் அரசியல் சட்டம் 21-வது பிரிவை விவாதிக்க மக்கள் முன்வர வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கருத்து

சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறை, இந்திய பாதிக்கப்பட்டோர் இயல் சங்கம் மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி உளவியல் துறை சார்பில் ‘அதிகரித்து வரும் பழிவாங்கும் படலம்’ என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பேசுகிறார். உடன் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி, யுனிசெப் தலைமை நிர்வாகி (சமூக கொள்கை) பினாகி சக்ராபோர்டி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முதல்வர் ரோசி ஜோசப், தேசிய சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் ஜி.எஸ்.பாஜ்பாய், பேராசிரியர்கள் எம்.சீனிவாசன், கே.சொக்கலிங்கம், பி.மாதவ சோமசுந்தரம், உதவி பேராசிரியர் மேரி சாந்தா ஜோசப் ஆகியோர் உள்ளனர். படம்: க.ஸ்ரீபரத்

சென்னை

அரசியல் சட்டம் 21-வது பிரிவு குறித்து விவாதிக்க மக்கள் முன்வர வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறை, இந்திய பாதிக்கப்பட்டோர் இயல் சங்கம் மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி உளவியல் துறை சார்பில் ‘அதிகரித்து வரும் பழிவாங்கும் படலம்’ என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பேசியதாவது:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை உரிமைகளை தந்துள்ளது. அதனால் அரசியல் சட்டம் 21-வது பிரிவு குறித்து சிந்திக்கவும் விவாதிக்கவும் பொதுமக்கள் முன்வர வேண்டும். ஒவ்வொரு வழக்கின் விசாரணையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிந்திக்கும் மனம் தண்டனை அறிவிக்கும்போது, குற்றவாளிகளின் நிலையை எண்ணி வேதனை அடைகிறது.

சமூகம் மற்றும் உறவினர்களால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் லட்சக்கணக்கான குழந்தைகள் துன்புறுத்தப்படுகின்றனர். இதனால் பள்ளி இடைநிற்றல் அதிகரிப்பதுடன், குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் இதன்தாக்கம் இருக்கிறது. செல்போன், கணினி உட்பட தொழில்நுட்ப வளர்ச்சிகளால் ஏற்படும் சைபர் குற்றங்களுக்கு நம் சட்டங்கள் போதுமானதாக இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா பேசும்போது, ‘‘ஒரு குற்றச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர், அதை செய்தவர் என இருதரப்பும் இழப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதனால் குற்றங்களை நடைபெறுவதை தவிர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை நோக்கிதான் நாம் நகர வேண்டும். அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்’’ என்றார்.

சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறைத் தலைவர் எம்.சீனிவாசன் பேசும்போது, ‘‘இந்திய பாதிக்கப்பட்டோர் இயல் சங்கத்தின் மூலம் கடந்த 27 ஆண்டுகளாக குற்றங்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கான உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களின் மனநிலை, அவர்களிடம் உருவாகும் மாற்றம் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளில் பழிவாங்கும் எண்ணம் அதிகரிப்பது தெரியவந்தது. எனவே, இந்த விவகாரத்தில் அதிக விவாதங்களை நடத்த வேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது. அந்த வகையில் பாதிக்கபட்டவர்கள் நலன்சார்ந்து அவர்கள் மீண்டெழுவற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி, தேசிய சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் ஜி.எஸ்.பாஜ்பாய், ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய செயற்குழு தலைவர் கே.சொக்கலிங்கம், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முதல்வர் ரோசி ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x