Published : 29 Feb 2020 07:34 AM
Last Updated : 29 Feb 2020 07:34 AM

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 15-வது நாளாக நீடிக்கும் வண்ணாரப்பேட்டை போராட்டம்: கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்

சென்னை

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் நேற்றுடன் 15-வது நாளை எட்டியது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் ஒருபகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஒன்று சேர்ந்து ‘சென்னையின் ஷாகீன்பாக்’ என்ற பெயரில் கடந்த 14-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பெண்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

வளைகாப்பு

போராட்டத்தின் 4-வது நாளில் ஒரு முஸ்லிம் ஜோடிக்கு திருமணமும் 13-வது நாளில் இந்து பெண் ஒருவருக்கு முஸ்லிம் பெண்கள் வளைகாப்பும் நடத்தினர். நேற்று முன்தினம் முஸ்லிம் பெண்கள் தண்ணீர் அருந்தாமலும் உணவு சாப்பிடமாலும் 14 மணி நேரம் நோன்பு இருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து தங்களது கோரிக்கை குறித்து பேசினர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றது. அப்போது, முதல்வர் தங்களது கருத்துகளை கனிவோடு கேட்டதாகவும் முஸ்லிம்களை பாதுகாக்கும் அரசாக இந்த அரசு இருக்கும் என்று கூறியதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

பேரவையில் தீர்மானம்

இதையடுத்து போராட்டக்குழு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தமாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதோடு குடியுரிமை சட்டம், மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அதில் தெரிவித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று 15-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. மாலையில் போராட்டக் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர். போராட்டத்தை முன்னெடுத்து செல்வது குறித்தும் முதல்வர் கூறிய கருத்தை வைத்து அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் ஆலோசித்ததாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x