Published : 29 Feb 2020 07:39 AM
Last Updated : 29 Feb 2020 07:39 AM
நாடு முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) கணக்கெடுப்பு நடப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பாஜகவினர் நேற்று பேரணி நடத்தினர்.
சென்னை மாநகர பாஜக சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த பேரணியில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், சென்னை கோட்ட பொறுப்பாளர் சக்கரவர்த்தி, ஜெய்சங்கர், நடிகர் ராதாரவி, முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் தமிழக தலைவர் பாத்திமா அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுகவை கண்டித்து கோஷம்
பேரணியில் பங்கேற்றவர்கள் குடியுரிமைச் சட்டம், என்பிஆர், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு ஆதரவாகவும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராடும் திமுகவை கண்டித்தும் கோஷமிட்டனர்.
அப்போது இல.கணேசன் பேசியதாவது:
குடியுரிமைச் சட்டத்தை ஒரே நாளில் ரகசியமாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துவிடவில்லை. பாஜக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் குடியுரிமைச் சட்டம், என்ஆர்சி கொண்டு வருவோம் என்று மக்களுக்கு வாக்குறுதிஅளித்திருந்தோம். தேர்தல்களின்போது மக்களிடம் பிரச்சாரமும் செய்தோம். அதை ஏற்று மக்கள்பாஜகவை ஆட்சியில் அமர்த்தி உள்ளனர்.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தி சட்டப்படி குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.
முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை
இந்தச் சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் யாருக்கும் குறிப்பாக முஸ்லிம்களில் ஒருவருக்குகூட பாதிப்பு இல்லை. ஆனாலும், திமுக உள்ளிட்ட கட்சிகள் முஸ்லிம்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வருகின்றன.
முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற குறுகிய அரசியல் லாபத்துக்காக, நாட்டு நலனுக்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கின்றன.
என்ன நடந்தாலும் நாடு முழுவதும் என்பிஆர் கணக்கெடுப்பு நடப்பதை யாராலும் தடுக்க முடியாது. முஸ்லிம் சமுதாயத்தினர் திமுகவை நம்பி ஏமாறாமல் நாட்டு நலனுக்காக குடியுரிமைச் சட்டத்தை ஏற்க வேண்டும்.
இவ்வாறு இல.கணேசன் பேசினார்.
தலைமை செயலரிடம் மனு
பின்னர் இல.கணேசன், கே.எஸ்.நரேந்திரன், சக்கரவர்த்தி, ஜெய்சங்கர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தை சந்தித்து மனு அளித்தனர்.
அதில், ‘குடியுரிமைச் சட்டத் துக்கு எதிரான போராட்டம் என்றபெயரில் தமிழகத்தில் வன்முறையை தூண்டுவோர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்,குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரானபோராட்ட மேடைகளில் மதமோதலைத் தூண்டும் வகையில்பேசும் திமுக மற்றும் அதன்கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தின் அமைதியை குலைக்கும் போராட்டங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்’ என குறிப் பிடப்பட்டு இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT