Published : 29 Feb 2020 06:53 AM
Last Updated : 29 Feb 2020 06:53 AM
உலக தையல்காரர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் ஆயத்த ஆடைகள் மீதான மோகத்தால் பாரம்பரியமாக தையல் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து நலிவடைந்து வருகின்றனர்.
கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்புவரை நினைத்தவுடன் புத்தாடைகள் எடுக்கும் பழக்கம் பொதுமக்களிடமில்லை. திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட முக்கிய கொண்டாட்டங்களுக்கே புத்தாடை அணிவார்கள். அப்போது தையல் கடைகளில் புத்தாடைகள் தைப்பதற்கு கூட்டம் நிரம்பி வழியும்.
வாடிக்கையாளர்களிடம் பெற்றதுணிகளை தைத்துக் கொடுக்கதையல் கலைஞர்கள், பண்டிகையைக்கூட குடும்பத்துடன் கொண்டாட முடியாமல் இரவு, பகலாக வேலைப்பார்த்தனர்.
ஆனால், தற்போது பொது மக்கள் புத்தாடைகள் உடுத்த விழாக்களுக்காக காத்திருக்காமல் நினைத்தநேரத்தில் ஜவுளிக் கடைகளில் ஆயத்த ஆடைகளை எடுக்கின்றனர். அதாவது, ஏற்கெனவே தைத்து கடைகளில் விற்பனைக்கு வைத்திருக்கும் ஆயத்த ஆடைகளை வாங்கி உடுத்துவதால் தையல் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் நலிவடைந்துள்ளனர்.
மதுரை திருப்பாலையைச் சேர்ந்த தையல் கலைஞர் பிரகாஷ் கூறியதாவது:
ஒரு காலத்தில் பெரிய முதலீடு எதுவும் இல்லாமல், ஆண்கள், பெண்கள் வீட்டில் இருந்தவாறே சம்பாதிக்கக்கூடிய தொழிலாக தையல் தொழில் இருந்தது. இதற்கு ஒரு தையல் எந்திரமும், நூல், ஊசி, பொத்தான், கத்தரிக்கோல், அளவெடுக்கும் பட்டை இருந்தாலே போதும். சொந்தமாக தையல் தொழில் தொடங்கி சம்பாதிக்க முடியும்.
வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசவும், நேர்த்தியாக, ரசனையாக ஆடைகளைத் தைக்கத் தெரிந்திருந்தால் இந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்தலாம். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி ஆர்டர்களுக்கு 3 மாதங்கள் வரை விடிய விடிய இருந்து தைப்போம். தற்போது நிலைமை தலைகீழ். அதிகபட்சம் 20 நாட்கள் தைப்பதற்கு துணிகள் வருவதே அபூர்வமாக உள்ளது.
பள்ளிச் சீருடைகளைத் தைக்கவே தற்போது அதிக அளவு துணிகள் வருகின்றன. கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் என்ற வேறுபாடின்றி இளைஞர்கள் தற்போது ஆயத்த ஆடைகளையே விரும்பி அணிகின்றனர். ஆனால், ஆயத்தஆடைகளைவிட எங்கள் தையல்தரமானது. மீண்டும் வாடிக்கை யாளர்கள் ஆடைகளைத் தைக்க வர வேண்டும் என்பதற்காக கவனமாகவும், நேர்த்தியாகவும் துணிகளைத் தைப்போம். ஏதாவது தவறு நடந்தால் வாடிக்கையாளர்கள் பணம் கொடுக்க மாட்டார்கள்.
ஆனால், ஆயத்த ஆடைகளைத்தைப்பவர்கள், வாடிக்கையாளர் கள் யாரென்று தெரியாமலே தைப்பார்கள். அதனால், அவர்களிடம் எங்கள் அளவுக்குத் தொழிலில் நேர்த்தி இருக்காது.
எங்களால் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுடன் போட்டியிட முடியவில்லை. இந்தத்தொழிலை தவிர வேறு வேலைக்கும் செல்ல முடியாமல், கடைசியில் அந்தப் பெருநிறுவனங்களிடமே கொத்தடிமையாக வேலைக்குச் செல்லும்நிலை உள்ளது.
இதேநிலை நீடித்தால் அடுத்த 10, 15 ஆண்டுகளில் தையல் கலைஞர்களும், தையல் தொழிலும் காணாமல் போய்விடும். தையல்தொழிலையும், தொழிலாளர்களை யும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
‘ரசனை அறிந்து தைத்தால் லாபகரமாகும்’
மதுரை எஸ்.எஸ்.காலனி டெய்லரிங் ஷாப் உரிமையாளர் விஜயலெட்சமி கூறும்போது, ‘‘டெய்லரிங் துறையில் எப்போதுமே போட்டி இருக்கும். புத்தாடைகள் அணிவதில் ட்ரெண்டிங் மாறிவிட்டது. சுடிதார், ப்ளவுஸ் போட்ட பெண்கள் தற்போது பேன்ட், சர்ட் என நவீனமான ஆடைகளை உடுத்துகின்றனர். அதனால், டெய்லரிங் தொழில் சவாலாக உள்ளது. ஆனால், விழாக்காலங்களில் மக்கள் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளையே அணிகின்றனர். அதற்கான வேலைவாய்ப்பு இன்னமும் இருக்கிறது. அதனால், தரமாகவும், வாடிக்கையாளர்கள் விரும்பும் ரசனைக்கேற்ப ஆடைகளைத் தைத்துக் கொடுத்தால் தையல் தொழிலை லாபகரமாகச் செய்யலாம். தையல் கலைஞர்களின் தையல் 10 ஆண்டுகளானாலும் அப்படியே இருக்கும். ஆனால், ஆயத்த ஆடைகளில் அதை எதிர்பார்க்கவே முடியாது. எந்த ஒரு வடிவமைப்பையும் பொதுவாகவே செய்வார்கள்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT