Published : 28 Feb 2020 06:02 PM
Last Updated : 28 Feb 2020 06:02 PM

இஸ்லாமியத் தலைவர்களுடன் பேசிய ரஜினி: விரைவில் நேரில் சந்திக்க முடிவு

இஸ்லாமியத் தலைவர்கள் விடுத்த அறிக்கை, வேண்டுகோளால் கவரப்பட்ட நடிகர் ரஜினிகாந்த அவர்களை போனில் அழைத்துப் பேசினார். உங்கள் அறிக்கையால் கவரப்பட்டேன். விரைவில் நேரில் சந்திக்க அழைக்கிறேன் என ரஜினி இஸ்லாமியத் தலைவர்களிடம் பேசியுள்ளதாகத் தகவல் வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன், அது ஆன்மிக அரசியல் என்றவுடன் அவர் மீது பாஜக அரசியல் சாயம் பூசப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் பாஜக தேசியத் தலைவர்கள், இந்து அமைப்புகளின் தலைவர்களுடன் ரஜினி நெருக்கம் காட்டினார். மத்திய அரசை ஆதரித்தார். மோடி, அமித் ஷாவைப் புகழ்ந்தார்.

ரஜினியின் அரசியல் பாஜகவைச் சார்ந்திருக்கும் என்பதை இது வலுப்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் அவர் சிஏஏவை ஆதரித்துப் பேசினார். அதே நேரம் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டாலும் நானே போராட்டத்தில் இறங்குவேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் நடத்திய பேரணி பெரும் கலவரமாக மாற, இதுவரை 42 பேர் பலியாகியுள்ளனர்.

இதை ரஜினி வன்மையாகக் கண்டித்துப் பேட்டி அளித்தார். அடக்க முடியாவிட்டால் பதவி விலகுங்கள் என்று காட்டமாகக் கூறினார். இந்நிலையில் சிஏஏ, என்பிஆர், என் ஆர்சி குறித்த ரஜினியின் கருத்தும், பெருவாரியான மக்கள் போராட்டத்தைப் பற்றிய ரஜினியின் எண்ணத்தை மாற்றவும் ரஜினிக்கு தமிழ்நாடு ஜமாத்துல் அல் உலமா சபை என்கிற அமைப்பு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

அவர்கள் அறிக்கை வருமாறு:

“மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ சட்டம் மற்றும் என்ஆர்சி, என்பிஆர் திட்டங்கள் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு தரப்பு கருத்துகளை மட்டுமே ரஜினி பிரதிபலித்துள்ளார்.பெரும்பான்மை மக்களின் கருத்துகளில் உள்ள நியாயத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை.

சட்ட வல்லுநர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், நாட்டில் உள்ள பெருவாரியான அரசியல் கட்சியினர், முஸ்லிம் மதகுருமார்கள், ஆண்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களை பாஜக அரசின் உள்நோக்கத்தையும் சரியாகப் புரிந்துகொண்டு அதன் விளைவாகவே ஒன்று திரண்டு கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.

மேலும் இந்தியாவின் 15 மாநிலங்களின் முதல்வர்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தூண்டி விடுகிறார்கள், பீதியைக் கிளப்புகிறார்கள் என்பது போன்ற வார்த்தைகள் ஒரு பெரும் மக்கள் இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்.
முஸ்லிம் மதகுருமார்கள்தான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு முதல் பலியானவர்கள் என்கிற வரலாற்றை ரஜினிகாந்துக்கு நினைவூட்டுகிறோம்.

அதே உணர்வோடுதான் தற்போது முஸ்லிம் மதகுருமார்கள் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பாஜக அரசுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். போராட்டக்காரர்களின் கருத்துகளை அவர் கேட்க வேண்டும். ஜனநாயக ரீதியாகப் போராடுகிற மக்களை ரஜினிகாந்த் தொடர்ந்து அவமதித்து வருகிறார் என்ற பழியில் இருந்து அவர் விடுபட வேண்டும்.

ரஜினியைச் சந்தித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை திட்டமிட்டுள்ளது. எனினும் ‘அல்லாஹ் அவன் விரும்புகிறவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான்’ (அல்குர்ஹான்)”.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

இது ரஜினியின் பார்வைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இதன் நிர்வாகி அன்வர் பாஷா உலவியை செல்போனில் அழைத்த ரஜினிகாந்த், ''உங்கள் கண்ணியமிக்க அறிக்கை என்னைக் கவர்ந்தது. உங்கள் ஆட்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.விரைவில் நேரம் ஒதுக்கி அழைக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இதனால் மேலும் சில இஸ்லாமிய அமைப்பினரையும் ஒன்றாக அழைத்து ரஜினி பேசுவார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x