Published : 28 Feb 2020 02:42 PM
Last Updated : 28 Feb 2020 02:42 PM

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்களின் இடமாறுதல் உத்தரவு ரத்து: டாக்டர்கள் சங்கம் வரவேற்பு

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களின் இட மாறுதல் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:

“ காலமுறை ஊதிய உயர்வு பதவி உயர்வு வழங்க வேண்டும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பேராசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறையை காரணம் காட்டி, மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிக்க வேண்டும், முதுநிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி அதன் மூலம் புதிய பணி இடங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) சார்பில் பொதுமக்களைப் பாதிக்காமல் பலகட்டப் போராட்டங்கள் சென்ற ஆண்டு நடத்தப்பட்டது.

மருத்துவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்த தமிழக அரசு அதை நிறைவேற்றத் தவறிவிட்டது. எனவே, தவிர்க்க முடியாமல் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ,சென்ற ஆண்டு அக்டோபர் 25 முதல் நவம்பர் 1 காலை வரை, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நடத்தினர்.

அப்போராட்டத்தின் பொழுது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், அந்தப் போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது, எந்த விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற வாக்குறுதியையும் தமிழக அரசு அளித்தது.

ஆனால், அவற்றை எல்லாம் மீறி, 120க்கும் மேற்பட்ட மருத்துவர்களை, அரசு இடமாறுதல் செய்தது. மருத்துவர்கள், அவர்கள் பணியாற்றிய துறைகளிலிருந்து, முற்றிலும் மாறுபட்ட வேறு துறைகளுக்கு (Different Speciality) மாற்றப்பட்டனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள்.

மேலும் இயக்கங்களைக் கடந்தும் ( DME to DMS) தொலை தூரத்திற்கு மாற்றப்பட்டனர். பலருக்கு , ஏன் பணி நீக்கம் செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸும் (17B) அனுப்பப்பட்டது. அனைத்துப் பழிவாங்கல் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பல முறை தமிழக அரசை கேட்டுக் கொண்ட போதிலும் அரசு அதை ஏற்கவில்லை.

இதனால் பல மருத்துவர்கள் உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களின் குடும்பங்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின. அதைத் தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு ரத்து செய்யாததால் வேறு வழியின்றி தவிர்க்க முடியாமல் இந்த இடமாறுதல் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி சில மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், இடமாறுதல் உத்தரவுகளையும், இதர பழிவாங்கும் நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ளது. அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளையும், தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இவை வரவேற்கத்தக்கவை. சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் இதனை மனதார வரவேற்கிறது.

ஆனால், அதே சமயம், அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என நீதிமன்றம் கருத்துக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இக்கருத்து அரசியல் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கும், ஜனநாயக உரிமைகளுக்கும், அரசு மருத்துவர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. நீதிமன்றத்தின் இக்கருத்து வருத்தம் அளிக்கிறது.

பழிவாங்கல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களின் நலன் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, இந்த இடமாறுதல் உத்தரவுகளை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நல்லெண்ண அடிப்படையில் சுமுகச் சூழலை உருவாக்கும் வகையில், அரசு மருத்துவர்களின் மன வருத்தத்தைப் போக்கும் வகையில் பழிவாங்கல் நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

அரசு மருத்துவர்கள் சங்கங்கங்களின் கூட்டமைப்புத் (FOGDA) தலைவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு கனிவோடு ஏற்க முன்வர வேண்டும்''.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x