Published : 28 Feb 2020 02:36 PM
Last Updated : 28 Feb 2020 02:36 PM

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பதைக் கைவிடாவிட்டால் போராட்டம்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பதை மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (பிப்.28) வெளியிட்ட அறிக்கையில், "மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் எத்தகைய பொருளாதாரப் பாதையில் பயணம் மேற்கொள்வது என்பது குறித்து தெளிவான பார்வையும், புரிதலும் இல்லாத காரணத்தால் பல தடுமாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.

சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் மத்திய பாஜக அரசின் அவலநிலை குறித்துப் படம் பிடித்துக் காட்டியிருப்பதை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையை எந்த மத்திய அரசும் இதுவரை புறக்கணித்ததில்லை. ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதில் கூறப்பட்டுள்ள பல தகவல்களைக் கண்டும், காணாமல் இருந்தது பொருளாதார நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மத்திய பாஜக அரசின் நிதிநிலை படுபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவதற்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது குறித்து நிதி ஆயோக் பல யோசனைகளை தெரிவித்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மதிப்பில் ரூபாய் 90 ஆயிரம் கோடியை விற்க வேண்டுமென்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 2017-18 இல் மத்திய பாஜக அரசு ரூபாய் 1 லட்சம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ரூபாய் 1 லட்சத்து 546 கோடி மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இதை மத்திய பாஜக அரசின் சாதனை என்று சொல்வதா? பொதுத்துறை என்பது மத்திய அரசின் சொத்து. மக்களின் சொத்து. அதை தனியாருக்கு அடிமாட்டு விலையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதை விட ஒரு மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்நிலையில், 1956 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் நேரு எடுத்துக்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக 245 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உருவாக்கப்பட்டது. இந்தியா விடுதலை அடைந்தபோது உள்கட்டமைப்பு வசதிகளோ, கனரக தொழில்களோ தொடங்க நிதி பற்றாக்குறை இருந்தது. இந்த நிதியுதவியைக் கொண்டு பல பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி, அவற்றை இந்தியாவின் கோயில்கள் என்று பிரதமர் நேரு மகிழ்ச்சி பொங்கக் கூறியதை எவரும் மறந்திட இயலாது.

ஆயுள் காப்பீடு என்பது நீண்டகாலத்திற்கானது என்பதால் மக்களின் பணம் அதிக காலம் காப்பீட்டு நிறுவனத்திடம் இருக்கும். அந்த வகையில் ரூபாய் 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்ஐசி, 2018-19 ஆம் ஆண்டு அரசுக்குரிய 5 சதவீத லாப பங்காக ரூபாய் 2,610 கோடியை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.

மேலும், இந்தியாவின் ஐந்தாண்டு திட்டங்களுக்கு இதுவரை ஏறக்குறைய 35 லட்சம் கோடி ரூபாய் எல்ஐசி நிறுவனம் நிதி திரட்டி வழங்கியுள்ளது.

இப்படி மிக உயர்ந்த நோக்கத்தோடு நேருவால் தொடங்கப்பட்ட எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பது மக்களின் சொத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதற்குச் சமமாகும். மோடி அரசு இதைத் தவிர ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு முதலீடாக எல்ஐசி வழங்கி வருகிறது. இந்தியாவின் காமதேனுவாக கருதப்படுகிற எல்ஐசி நிறுவனத்தைத் தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து அதன் பாலிசிதாரர்கள், ஊழியர்கள் ஆகியோர் மிகுந்த பதற்றத்துடனும், அச்சத்துடனும் இருந்து வருகின்றனர்.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மிகச் சிறந்த செயல்பாட்டின் காரணமாக தனியார் காப்பீட்டு நிறுவனங்களோடு கடுமையான போட்டி இருந்தாலும் 2018-19 ஆம் நிதியாண்டில் பாலிசிதாரர்களுக்கு வழங்கியுள்ள தொகை ரூபாய் 1.63 லட்சம் கோடி. பணம் பெற்றவர்கள் 2.6 கோடி பேர். 134 கோடி மக்களைக் கொண்ட இந்திய நாட்டில் 30 கோடி பாலிசிதாரர்களைக் கொண்ட எல்ஐசி நிறுவனத்தின் தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் சிதைத்துத் தனியாருக்கு தாரை வார்ப்பதை இந்திய குடிமக்கள் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

2000 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பின் 20 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கடுமையான போட்டியை உருவாக்கியும், ஆயுள் காப்பீட்டுத் துறையில் மட்டும் சராசரியாக 1 சதவிகித சந்தைப் பங்கை மட்டுமே கொண்டிருக்கின்றன. இதைப் பார்க்கிறபோது இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரே நிறுவனமாக எல்ஐசி விளங்கி வருகிறது.

2018-19 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் திட்டமிட்டதை விட ரூபாய் 1.7 லட்சம் கோடி குறைவாகவே உண்மையான வருவாய் வந்துள்ளது. இதனால் தான் இந்தியப் பொருளாதாரம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலனாக, உற்ற தோழனாக செயல்பட்டு வந்த எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பதை மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x