Published : 28 Feb 2020 01:05 PM
Last Updated : 28 Feb 2020 01:05 PM
கரோனா அச்சம் காரணமாக, ஈரான் மற்றும் அருகிலுள்ள தீவுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 800க்கும் மேற்பட்ட கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்ட மீனவர்களை உடனடியாக இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வர மக்களவை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனா மற்றும் கொரியாவைத் தொடர்ந்து ஈரானிலும் ஆட்கொல்லி கரோனா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து, பெரும்பாலான வளைகுடா நாடுகளில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, இன்று (பிப்.28) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், வளைகுடா நாடுகளில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஈரான் மற்றும் அருகிலுள்ள தீவுகளில் பணியாற்றிக்கொண்டிருக்கும் 800-க்கும் மேற்பட்ட கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்ட மீனவர்களை உடனடியாக இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வர கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மற்றும் அருகிலுள்ள கிஸ், அசாலுயே, காம்கு மற்றும் ஸ்ட்ராக் போன்ற தீவுகளில் 800-க்கும் மேற்பட்ட கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்ட மீனவர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக மீனவர்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், சீனாவின் உகான் மற்றும் யோகோகாமா நகரிலிருந்து, இந்தியர்களை மீட்டெடுத்ததைப் போலவே, கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்ட மீனவர்களை மீட்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டுமென டி.ஆர்.பாலு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT