Published : 28 Feb 2020 07:22 AM
Last Updated : 28 Feb 2020 07:22 AM
கோவிட்-19 காய்ச்சல் பரவலைத் தடுக்க இந்தியப் பயணிகளை அனுமதிக்க சவுதி அரசு மறுத்ததால், உம்ரா பயணிகள் 67 பேரை விமானத்தில் ஏற்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுத்துவிட்டது.
மதுரையிலிருந்து நேற்று காலை 10 மணிக்கு இலங்கை செல்ல ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் உம்ரா பயணத்துக்காக இலங்கை வழியாக சவுதி செல்ல 67 பேர் தயாராக இருந்தனர்.
உடைமைகள் பரிசோதனை முடிந்த நிலையில் கோவிட்-19 காய்ச்சல் பரவலைக் காரணம் காட்டி இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க சவுதி அரசு மறுத்துவிட்டது. இந்தத் தகவல் அப்போதுதான் விமான நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 67 பயணிகளையும் விமானத்தில் ஏற்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. இதையடுத்து 67 பயணிகளும் ஏமாற்றத்துடன் மதுரை விமான நிலையத்திலிருந்து திரும்பிச்சென்றனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த பயணி முகம்மது ரபீக் கூறுகையில், முதல்முறையாக இப்போதுதான் உம்ரா பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டோம். இதற்காக மிகவும் ஆவலுடன் வந்தோம். விமானத்தில் ஏறும் சமயத்தில் திடீரென சவுதி அரசின் உத்தரவால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளோம். அனுமதி அளிப்பதும், மறுப்பதும் சவுதி அரசின் உரிமை என்றாலும் அதை முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். விமானத்தில் ஏறும்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் எங்களால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் ஊர் திரும்புகிறோம் என்றார்.
சர்வதேச விமான சேவை
ஈரானில் கோவிட்-19 காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கிருந்து விமானத்தில் பாகிஸ்தானுக்கு திரும்பிய 2 பயணிகள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து ஈரானுடனான விமானப் போக்குவரத்தை பாகிஸ்தான் முழுமையாக ரத்து செய்துள்ளது. இதேபோல தென்கொரியா, இத்தாலியில் கோவிட்-19 காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அந்த நாடுகளுடனான விமான சேவைகளை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT