Published : 27 Feb 2020 05:45 PM
Last Updated : 27 Feb 2020 05:45 PM
‘இந்தியன் -2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு லைகா மேலாளர் சுந்தர்ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கமல் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் படம் ‘இந்தியன் -2’ . இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த நசரத் பேட்டை பகுதியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.
படப்பிடிப்பின்போது இரவு நேரத்தில், பகல் போல் வெளிச்சம் தருவதற்காக பெரிய விளக்குகளை ஒன்றிணைத்து அதை பெரிய இரும்பு பிரேமில் இணைத்து ராட்சத கிரேன் மூலம் மேலே தூக்கி நிறுத்தி படப்படிப்பை நடத்தி வந்தனர். வழக்கம்போல் கடந்த 19-ம் தேதி இரவு 9.30 மணி அளவில் படப்பிடிப்பு நடந்தது.
கமல், நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்து முடித்து அடுத்த காட்சிக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென கிரேன் ஒருபக்கமாக சரிந்து விழுந்ததில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் லைகா, கிரேன் உரிமையாளர், கிரேன் ஆப்ரேட்டர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷங்கர், கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட லைகா நிறுவன ஊழியர்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதேபோன்று லைகா நிறுவன தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜ் தன்னை போலீஸ் விசாரணைக்கு அழைத்துள்ளதால் தன்னைக் கைது செய்யலாம் என அஞ்சி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான கிரேன் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை இயக்குவது, பராமரிப்பது என்னுடைய வேலை இல்லை. விபத்துச் சம்பவத்தின்போது நான் 300 மீட்டர் தள்ளி உணவுப் பரிமாற்றத்தை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்.
விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் என்னை விசாரணைக்கு போலீஸார் அழைத்துள்ளார்கள். எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT