Published : 27 Feb 2020 12:27 PM
Last Updated : 27 Feb 2020 12:27 PM

அசாமில் குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 19 லட்சம் பேரில் 13 லட்சம் பேர் இந்துக்கள்: இந்து பாதுகாவலர்கள் எங்கே போனார்கள்?- ஸ்டாலின் கேள்வி

குடியுரிமைப் போர் என்பது சிலர் செய்யும் விஷமப் பிரச்சாரம் போல இஸ்லாமியர்களின் போரோ, இந்துக்களின் போரோ அல்ல; இந்தியர்களைக் காப்பதற்கான போர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னையில் நேற்று மாலை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடத்தப்பட்ட குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

“நாட்டின் தலைநகர் டெல்லியே வன்முறை மயமான நிலையில், உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டு மேடையில் உரையாற்றுவதற்காக வந்திருக்கிறோம். எங்களுடைய உணர்வுகளைத் தெளிவுபடுத்த வந்திருக்கிறோம். ஒரு உறுதி எடுப்பதற்காகவும் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.

குடியுரிமைப் பாதுகாப்பு மாநாடு எனப் பெயர் சூட்ட என்ன காரணம்? குடியுரிமைக்குப் பாதுகாப்பு இல்லை என்பதுதான். அதற்காகத்தான் இந்த மாநாடு இங்கே நடத்தப்படுகிறது என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் நாம் கூடியிருக்கிறோம். இது சென்னை மாநகரத்தில் மட்டும் அல்ல. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் குடியுரிமைப் பாதுகாப்புக்காக இமயம் முதல் குமரி வரை மக்கள் போராடி வருகிறார்கள்.

பரந்து விரிந்த இந்திய நாடு கொந்தளிப்பாகவும் படபடப்புடனும் இருக்கிறது. அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறது. அச்சத்தால் பீடிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் பல கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக நாம் தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். தலைநகர் டெல்லியில் நடக்கும் காட்சிகளைப் பார்த்தால், அங்கு நடக்கும் கலவரங்களைப் பார்த்தால், அங்கு யார் கையில் அதிகாரம் இருக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அரசாங்கத்தை, காவல்துறையை இயக்கிக் கொண்டிருப்பது யார்? வன்முறையாளர்கள் கையில் தலைநகர் டெல்லி போய்விட்டதா? தலைநகரே வன்முறைக்கு ஆளாகி வருகிறது என்றால் அங்கிருக்கும் உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்ற அந்தக் கேள்வியைத்தான் கேட்க விரும்புகிறேன்.

தேவையான அளவுக்கு காவல்துறை இல்லை என்று முதல்வர் கேஜ்ரிவால் சொல்கிறார். இது யாருடைய தவறு? என்ன நடந்து கொண்டிருக்கிறது? டெல்லிக்கே இந்த நிலை என்றால், இந்தியாவில் மற்ற மாநிலங்கள், மாநகரங்களுக்கு என்ன நிலை வரும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 20-க்கும் மேற்பட்டோர் டெல்லி வன்முறையில் இறந்து போய் இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஊடகத்துறையைச் சார்ந்த செய்தியாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஜேகே செய்தித் தொலைக்காட்சியைச் சேர்ந்த செய்தியாளர் மீது துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. என்டிடிவி செய்தியாளர் அரவிந்த் குணசேகரனும், சவுரவ் சுக்லாவும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற மத்திய அரசு தவறி இருக்கிறது என்பது மட்டும் அல்ல, அதைக் காப்பாற்றுவதற்கான மனம் மத்திய அரசுக்கு இல்லை என்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் நமக்கு எடுத்துக் காட்டி இருக்கின்றன.

இத்தகைய கொந்தளிப்பான காலகட்டத்தில்தான் இந்தக் குடியுரிமைப் பாதுகாப்பு மாநாடு தமிழகத்தில், சென்னை ஒய்எம்சிஏ திடலில் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 2 மாதங்களாக இந்தியா முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எதற்காக இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன என்பதை அறிந்து, புரிந்து அதற்கேற்ற வகையில் மத்திய அரசு தன்னுடைய எண்ணத்தை மாற்ற முன்வருகிறதா? மத்தியில் இருக்கும் பாஜக அரசு அதற்கு இம்மியளவும், துளியளவும் முன்வரவில்லை.

அவர்களுக்குத் தெரிந்த ஒரே பதில் எதிர்க் கட்சிகள் இந்தப் போராட்டங்களைத் தூண்டுகிறது என்பதுதான். இந்த நிகழ்ச்சிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வருவதாக இருந்து உடல்நலம் பாதித்த காரணத்தினால் அவர் வரவில்லை. அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர். இங்கே வருகை புரிந்திருக்கும் புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

நான் திமுகவைச் சேர்ந்தவன். நாங்கள் எல்லாம் வெவ்வேறு இயக்கம், வெவ்வேறு தத்துவத்தின் பிரதிநிதிகளாக விளங்கிக் கொண்டிருப்பவர்கள். நாராயணசாமி இந்திய தேசிய தத்துவத்தைச் சார்ந்தவர். கேரள முதல்வர் வரவில்லை என்றாலும் அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இந்த மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். பொதுவுடைமை தத்துவத்தைச் சார்ந்திருப்பவர்கள்.

நான் திராவிட இயக்கத்தின், தமிழினத்தின் மேம்பாட்டை முன்னெடுக்கக் கூடியவன். மேடையில் உள்ள நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்பது பாஜகவை எதிர்ப்பதற்காக என்று கருத வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக; இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்காக; இந்திய மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தான், நாங்கள் இங்கே ஒரே மேடையில் நின்று கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அரசியல் நடத்துவதற்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. மோடி ஆட்சியில் எல்லாமே பிரச்சினைகள்தான். அதை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியும்.

பொருளாதாரத்தை ஐந்து டிரில்லியன் ஆக்குவதாகவும், விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவதாகவும், ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், நாட்டில் உள்ள அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வோம் என்றும், வெளிநாட்டில் பதுக்கிய கருப்புப் பணத்தை மீட்பேன் என்றும், இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவேன் என்றும், இந்தியாவில் ஓடும் நதிகளை இணைப்பேன் என்றும், இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் அனைத்துப் பொருட்களும் தயாரிக்கப்படும் என்றும் பல வாக்குறுதிகளை அளித்து வாக்குகளை வாங்கினீர்களே, அவற்றை எல்லாம் செய்தீர்களா?

தமிழகத்தில் எத்தனையோ திட்டங்களை அறிவித்தார்கள். அவை எல்லாம் நிறைவேற்றப்பட்டதா? 4 நாட்களுக்கு முன்னர் மதுரைக்குச் சென்றிருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து என்ன நிலை என்று பார்க்க நேரடியாகச் சென்றேன். அதன் பின்னர் புகைப்படம் எடுத்தோம். அங்கு வைத்திருந்த போர்டையும் இப்போது காணவில்லை. இதுபோன்ற ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன நாங்கள் அரசியல் செய்வதற்கு.

ஆனால், குடியுரிமையை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இது மக்கள் பிரச்சினை; நாட்டின் பிரச்சினை என்பதை உணர்ந்துதான் இதை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். குடியுரிமை வழங்குவதற்காகத்தான் அரசு சட்டம் இயற்றும். ஆனால் குடியுரிமையைப் பறிப்பதற்காக ஒரு அரசு சட்டம் இயற்றுகிறது என்றால், இதை விட வெட்கப்பட வேண்டிய ஒன்று வேறு என்ன இருக்கிறது?

கேரள முதல்வர் உடல்நலக்குறைவு காரணமாக வரவில்லை. புதுவை முதல்வர், மேடையில் உள்ள பல இயக்கங்கள், அமைப்புகளில் இருந்து வந்துள்ள தோழர்கள் என நாங்கள் அனைவரும் அரசியல் சார்பு உள்ளவர்கள். ஆனால், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் மூலம் இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருப்பவர்கள் யார் என்று பாருங்கள்.

பத்திரிகையாளர் என்.ராம், முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத், இசைக்கலைஞர் டிஎம் கிருஷ்ணா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கல்வியாளர் தாவூத் மியாகான், திரைக்கலைஞர் ரோகிணி, மருத்துவர் டி.காமராஜ், பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஆகியோர் சேர்ந்து அமைத்திருக்கும் மேடை இது.

இவர்கள் அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களா? இவர்களை நாங்கள் தூண்டிவிடமுடியுமா? நாங்கள் தூண்டிவிட்டால் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் மக்கள்தொகைப் பதிவேட்டால் குடியுரிமைப் பதிவேட்டால் நாம் பாதிக்கப்படுகிறோம் என்ற அச்சத்தின் காரணமாக மக்கள் வீதிக்கு வருகிறார்கள்.

இந்த அச்சத்தை, பயத்தைப் போக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டா இல்லையா? இந்தக் குடியுரிமைப் போர் என்பது சிலர் செய்யும் விஷமப் பிரச்சாரம் போல இஸ்லாமியர்களின் போர் அல்ல; இந்துக்களின் போர் அல்ல; இது இந்தியர்களைக் காக்கக் கூடிய போர்.

குடிமக்கள் பதிவேடு, மக்கள்தொகை பதிவேட்டால் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்துக்கள் மட்டும் அல்ல. இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்று சொல்வதே தவறு. ஒட்டுமொத்த இந்தியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதுதான் உண்மை. அசாம் மாநிலத்தில் 19 லட்சம் பேர் குடியுரிமையை இழந்துள்ளார்கள். அதில் 6 லட்சம் பேர் இஸ்லாமியர்கள், என்றால் மீதி 13 லட்சம் பேர் இந்துக்கள்.

அப்படியானால் இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்காக அவதாரம் எடுத்ததாக நடிப்பவர்கள் எங்கே போனார்கள்? குடியுரிமைப் பதிவேடுகளால் இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு என்று சொல்லி நம்மை இந்துக்களின் எதிரிகளாகக் காட்டுவதற்கு ஒரு கூட்டம் துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்காகத் திட்டமிட்டு சதித்திட்டம் தீட்டி அதில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்தியர்களை மதத்தின் அடிப்படையில் பிரிக்காதீர்கள் என்று சொன்னால், நாங்கள் இந்த நாட்டின் விரோதிகளா? இந்துத்துவாவை எதிர்க்கிறோமே தவிர இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களை அல்ல. ஒருவர் எந்தக் கடவுளையும் வணங்கலாம். எந்தக் கோயிலுக்கும் போகலாம். எந்த உணவையும் சாப்பிடலாம். அது அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது. ஆனால் அதில் தங்களது வன்மத்தை, அராஜகத்தைச் சர்வாதிகாரத்தைத் திணிப்பதைத்தான் நாங்கள் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்.

சகோதரத்துவத்தை, சமத்துவத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தப் பிரச்சினைகளை அண்ணா காலத்தில் இருந்து கலைஞர் காலத்தில் இருந்து தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே மனித மனங்களைப் பிளவுபடுத்தும் காரியங்களை விட்டு விட்டு மாற்றுவழியை யோசியுங்கள் என்பதைத்தான் மத்திய அரசை நான் மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டால் இங்குள்ளவர்களுக்கு நிச்சயம் பாதிப்பு வரும். உங்கள் பெற்றோர் இருவரும் எங்கே பிறந்தார்கள் என்பதை நிரூபிக்காவிட்டால் அவர்கள் சந்தேகத்திற்குரிய குடிமக்களாக மாறிவிடுகிறார்கள். அந்தச் சந்தேகத்தை நீங்கள் தீர்க்காவிட்டால் நீங்களும் சந்தேகத்திற்குரிய நபராக ஆகிவிடுவீர்கள். இது தேவைதானா? மத்திய அரசு கேட்கும் ஆவணங்களை சாமானிய மக்களால் தர முடியாது என்பதால்தான் அதனை நாங்கள் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்.

சட்டப்பேரவையில் இதுகுறித்துக் கேட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனால் யாருக்கும் பாதிப்பு வராது என்று விளக்கம் சொன்னார். இப்போது மத்திய அரசுக்கு அவரே கடிதம் எழுதியிருக்கிறார். தேவையில்லாத விவரங்களைக் கேட்கிறார்கள். என்பிஆர் கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று நான் சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கேட்டேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்துடன், சிடுசிடு முகத்தை வைத்துக்கொண்டு ‘ சிஏஏ சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா? திமுக ஏமாற்றுகிறது. கபட நாடகம் ஆடுகிறது’ என்று கத்திப் பேசினார். அப்படிப் பேசிவிட்டு கடந்த 21-ம் தேதி ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டார்கள்.

அதில் தாய்மொழி, தந்தை, தாயார், கைபேசி எண், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிம எண் போன்ற விவரங்கள் கேட்கப்படுவது 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

எந்தவொரு சிறுபான்மையினரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, எதற்காக இப்படி ஒரு கடிதம் எழுதினார். எனவே ஆபத்து இருக்கிறது என்பதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டாரா? இல்லையா? .

எனவே என்பிஆரை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் உடனே அறிவிக்கவேண்டும். உடனே அமைச்சரவையைக் கூட்டி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை நீங்கள் உடனடியாக கொண்டு வரவேண்டும். நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்ததற்காக உங்களுக்கு வாக்களித்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் வைக்கிறேன்.

இதை எடப்பாடி பழனிசாமி செய்வாரா? செய்ய மாட்டார். செய்தால் சிறைக்குப் போகவேண்டும். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தன் மீதுள்ள வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்ள மக்களைப் பலிகடா ஆக்கும் பணியில் இந்த ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. மதமாக இருந்தாலும் சாதியாக இருந்தாலும் அது இரண்டு பக்கமும் கூரான கத்தி.

அதை மறந்துவிடாதீர்கள். யார் அதனைப் பயன்படுத்தினாலும் அது பயன்படுத்துபவரையே பதம் பார்க்கும் என்பதைத்தான் மத்திய அரசுக்கு எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன். பாஜக என்ற ஒரு அரசியல் கட்சி. அரசியல் ரீதியாக எதையும் பேசட்டும். அதைப் பற்றி நாம் கவலைப்பட போவதில்லை. மக்களும் கவலைப்படப் போவதில்லை.

ஆனால், மதத்தைப் பயன்படுத்தி நாட்டை மதவாத நாடாக மாற்ற நினைத்தால் அதைத் தடுக்க வேண்டிய ஜனநாயகக் கடமை நமக்கு இருக்கிறதா இல்லையா? நீங்கள் கொண்டு வரக்கூடிய சதித்திட்டங்களால் இந்தியர்களின் பசி, பட்டினி, வறுமை தீராது, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியாது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறுங்கள். தேசியக் குடியுரிமைப் பதிவேடு மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பதை உடனே நிறுத்துங்கள். இந்தியாவை அமைதி சூழ்ந்த நாடாக மாற்றுங்கள். இந்தியாவின் பாரம்பரியத்தைக் காப்பாற்றுங்கள். இந்தியப் பிரதமரிடம் இருந்து மக்கள் முதலில் எதிர்பார்ப்பது அமைதியான நிம்மதியான வாழ்வு.

அத்தகைய அமைதியான நிம்மதியான வாழ்க்கையை மக்கள் பெறுவதற்குப் பிரதமர் பொறுப்பில் இருக்கும் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் என்னுடைய அழுத்தம் திருத்தமான கோரிக்கையை எடுத்துவைக்கிறேன்’’.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x