Published : 27 Feb 2020 11:39 AM
Last Updated : 27 Feb 2020 11:39 AM

பிஹார் போலவே தமிழகமும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

மத்திய அரசு கொண்டு வரவுள்ள என் ஆர்சிக்கு எதிராக பீஹார் அரசு தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்பிஆரை 2010 வடிவில் கொண்டுவரவேண்டும் என தமிழகமும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சிஏஏவுக்கு எதிராக இந்தியா முழுதும் பெரிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது. என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராகவும் போராட்டம் நடந்து வருகிறது. பல மாநிலங்கள் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இந்நிலையில் பாஜக கூட்டணியுடன் ஆளும் பீஹாரும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. என்பிஆர் சட்டத்தை 2010-ம் ஆண்டு வடிவத்திலேயே கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வரும் இதுகுறித்து பரிசீலிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதைக்குறிப்பிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

— Dr S RAMADOSS (@drramadoss) February 27, 2020

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

“ பிஹார் மாநில சட்டப்பேரவையில் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையும் இது தான். 31.12.2019 அன்று நடைபெற்ற பாமக மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் இதை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிஹார் மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பிஹார் மாநிலத்தைப் போலவே 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிக்கப்பட வேண்டும்.

அஸ்ஸாம் மாநிலத்தை தவிர இந்தியாவின் எந்த மாநிலத்திலும் NRC தயாரிக்கப்படாது; அது குறித்த விவாதம் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருப்பதும், அதை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வழி மொழிந்திருப்பதும் வரவேற்கத்தக்கவை.

தமிழக சட்டப்பேரவையில் குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது சரியான நிலைப்பாடு. தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தொடர்பாக மக்களிடம் நிலவி வரும் அச்சத்தையும், ஐயத்தையும் அரசு போக்க வேண்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x