Published : 27 Feb 2020 08:20 AM
Last Updated : 27 Feb 2020 08:20 AM
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) சார்பில் பயணிகளின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது, வெளிமாநிலங்களுக்கும் ஏசி பேருந்துகள், படுக்கை வசதி கொண்ட பேருந்துகள், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்துகளில், தாங்கள் விரும்பும் இருக்கையை தேர்ந்தெடுத்து பயணிகள் எளிதாக முன்பதிவு செய்யும் வகையில் கடந்த ஜனவரி 28-ம் தேதி செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 14 ஆயிரம் பேர் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். செயலி மூலம் 4,700 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தசெயலி குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது: ‘TNSTC Official App' எனும் அந்தச் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த பிறகு தமிழ் அல்லது ஆங்கில மொழியை தேர்வு செய்து, மின்னஞ்சல் முகவரி, பாஸ்வேர்டு, பெயர், பாலினம், செல்போன் எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும். பிறகு, மின்னஞ்சல் முகவரியை Username-ஆகக் கொண்டு பாஸ்வேர்டை பதிவிட்டு ‘லாகின்’ செய்து கொள்ளலாம். ஒரே ஒருமுறை மட்டும் செயலியில் இவ்வாறு ‘லாகின்’ செய்தால் போதுமானது. மீண்டும், மீண்டும் லாகின் செய்ய வேண்டியதில்லை.
எஸ்.எம்.எஸ். போதும்
‘புக் டிக்கெட்' என்பதை கிளிக் செய்து பயணிக்கும் இடத்தை தேர்வு செய்து, பேருந்தில் விருப்பமான இருக்கையை தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யும்போதே வழித்தடத்தில் எந்தெந்த இடங்களில் ஏறலாம், இறங்கலாம் என்ற விவரம் இருக்கும். அதை விருப்பம்போல பயணிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பயணிக்கும்போது முன்பதிவு செய்ததற்கான எஸ்எம்எஸ்-ஐ காண்பித்தால் போதுமானது. மேலும், அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகள் மட்டுமல்லாது, நெடுந்தூரம் செல்லும் அரசுப் போக்குவரத்துக்கழக (டிஎன்எஸ்டிசி) பேருந்துகளிலும் இந்த செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
60 நாட்களுக்கு முன் பதிவு
செயலி மூலம் பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணத்தின்போது பயணிகள் ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் முன்பதிவின்போது அடையாள அட்டையின் விவரங்களை குறிப்பிட வேண்டும்.
முதியோர் பயணிக்கும்போது வயது முதிர்வுக்கான புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். பயண நேரத்துக்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்யும் வசதியும் செயலில் உள்ளது. டிக்கெட் ரத்து செய்த பணம் வங்கி வேலை நாளில் 15 நாட்களுக்குள் திருப்பி அளிக்கப்படும். பேருந்து செல்லும் வழியில் ஏறும் பயணிகளின் வசதிக்காக, பேருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் இடத்தை அறியும் வசதியும் விரைவில் செயலியில் இடம்பெற உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT