Published : 27 Feb 2020 06:57 AM
Last Updated : 27 Feb 2020 06:57 AM

தமிழகத்தில் என்பிஆரை அனுமதிக்க மாட்டோம் என அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’ அமைப்பு சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ‘இந்து’ என்.ராம், அய்யா வழி பாலபிரஜாபதி அடிகளார், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பேராயர் தேவசகாயம், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மவுலானா மொய்தீன் பாகவி, அருணன் ஆகியோர் பங்கேற்றனர்

சென்னை

தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்பிஆர்) அனுமதிக்க மாட்டோம் என அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை' அமைப்பு சார்பில் சென்னைராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது. இதில் ஸ்டாலின் பேசியதாவது:

குடியுரிமையை பாதுகாக்க நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடைபெறும் கலவரங்களை பார்க்கும்போது யாருடைய கைகளில் அதிகாரம் உள்ளது என்ற கேள்வி எழுகிறது. குடியுரிமை பறிக்கப்படும் என்ற அச்சத்தால் மக்கள் போராடு கின்றனர். அந்த அச்சத்தை போக்கவேண்டியது மத்திய பாஜக அரசின்கடமை. குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பதால் எங்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாக சித்தரிக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்துத்துவத்தை எதிர்க்கிறோமே தவிர இந்து மத நம்பிக்கை கொண்டவர்களை எதிர்க்கவில்லை.

முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார்

தேசிய மக்கள்தொகை பதிவேட்டால் (என்பிஆர்) முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்குமே பாதிப்பு வரும். தந்தை, தாயாரின் பிறந்த இடம் போன்ற ஆவணங்களை எல்லோராலும் தர முடியாது.

சட்டப்பேரவையில் இந்தச் சட்டத்தை நாங்கள் எதிர்த்தபோது, இதனால், எந்த பாதிப்பும் வராது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். ஆனால், இப்போது அவர்களே, தேவையற்ற ஆவணங்களை மக்களிடம் கேட்கக் கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதன்மூலம் குடியுரிமைச் சட்டத்தால் பாதிப்பு இருப்பதை முதல்வர் ஒப்புக்கொண்டுள் ளார்.

மத்திய அரசு நடவடிக்கை

எனவே, என்பிஆரை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அமைச்சரவையைச் கூட்டி உடனேதீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. குடியுரிமைச் சட்டத்தை உடனே திரும்பப் பெற்று, மக்கள் அமைதியாக வாழ வழி ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

ரஜினி போராட வரவேண்டும்

மாநாட்டில் ‘இந்து’ என்.ராம் பேசியதாவது:

கடந்த 1989 முதல் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வருவோம் என்று பாஜகவினர் வாக்குறுதி அளித்து வருகின்றனர். குடியுரிமைச் சட்டம் என்பது இந்திய அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் விரோதமானது. இதற்கு இந்த அளவுக்கு எதிர்ப்பு வரும் என்பதை பாஜக அரசு எதிர்பார்க்கவில்லை.

என்பிஆர், என்ஆர்சி இரண்டும் வெவ்வேறல்ல. என்ஆர்சி கொண்டு வருவதற்கான முதல்படிதான் என்பிஆர். என்பிஆரை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். குடியுரிமைச் சட்டம், என்பிஆரால் ஒரு இந்திய முஸ்லிம் பாதிக்கப்பட்டாலும் போராடுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இப்போது டெல்லியில் கலவரம் ஏற்பட்டு முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ரஜினி போராட வர வேண்டும். குடியுரிமைச் சட்டம், என்பிஆர் பற்றிய தனது நிலைப்பாட்டை ரஜினி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக மக்கள் ஒற்றுமைமேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் அருணன், க.உதயகுமார், கல்வியாளர் தாவூத் மியாகான், அய்யா வழி பாலபிரஜாபதி அடிகளார், மவுலானா மொய்தீன் பாகவி, பேராயர் தேவசகாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x