Published : 26 Feb 2020 09:17 PM
Last Updated : 26 Feb 2020 09:17 PM
மதுரை மாநகரம், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி வடிவமைக்கப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெரும் நகரம்.
மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி நான்கு சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசிவீதிகள், மாரட் வீதிகள், வெளி வீதிகள் உள்ளன. இதில், சித்திரை வீதிகளில் விஐபி வாகனங்களும், காவல்துறை வாகனங்களும் சென்று வருகின்றன. மற்ற வாகனங்களுக்கு அனுமதியில்லை. ஆவணி மூல வீதிகளில் ஏராளமான சிறிய, பெரிய வியாபார நிறுவனங்கள் உள்ளன.
மாசி வீதிகளில் ஹோட்டல்கள், விடுதிகள், மிகப்பெரும் வணிக நிறுவனங்கள், லாரி புக்கிங் சர்வீஸ் அலுவலகங்கள் உள்ளன. மாரட் வீதிகளில் வங்கிகள், வியாபார நிறுவனங்கள் உள்ளன. ஆரம்ப காலத்தில் மீனாட்சிம்மன் கோயிலைச் சுற்றிய நகர குடியிருப்புகள் இருந்தன. காலப்போக்கில், நகர விரிவாக்கம், வணிமயமாக்கல் கொள்கையால் குடியிருப்புப் பகுதிகள் வணிக வளாகங்களாகவும், பெரும் வணிக நிறுவனங்களாகவும் மாற்றப்பட்டன.
இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் ரூ.1,000 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றப்படுகிறது. ஐரோப்பா நாடுகளில் உள்ள ‘ஸ்மார்ட் சிட்டி’ நகரங்களைப் போல, இந்தியாவில் உள்ள நகரங்களையும் மாற்ற வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். அதனால், இந்தத் திட்டத்தில் மீனாட்சியம்மன் கோயில் பகுதிகளில் அதன் பழமை மாறாமல் சுத்தமான 24 மணி நேரம் குடிநீர் விநியோகம், தடையில்லா மின்சார விநியோகம், ஸ்மார்ட் சாலைகள், அதிவேக, 'இன்டர்நெட்' இணைப்பு, தானியங்கி திடக்கழிவு மேலாண்மை, சிறப்பான பொது போக்குவரத்து, கனிணி மயமாக்கப்பட்ட பொதுமக்கள் சேவைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக, தற்போது மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 24 மணிநேர குடிநீர் விநியோகத்திற்கான குடிநீர் குழாய் பதிப்பு பணிகள், பாதாள சாக்கடைகள் அமைக்கும் பணிகள், ஸ்மார்ட் சாலைகள் அமைக்கும் பணிகள், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துறையின் கேபிள்கள் பதிப்பு பணிகள் நடக்கின்றன. இந்தப் பணியால் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் தூசியமாகிவிட்டன. சாலைகளின் அனைத்துப் பகுதிகளும் தோண்டிப்பட்டு மூடப்படாமல் உள்ளதால் வணிக நிறுவனங்கள் அனைத்திலும் கடந்த சில மாதமாக வியாபாரம் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தற்போது ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்திற்காக அனைத்துச் சாலைகளிலும் குடிநீர் குழாய், பாதாள சாக்கடை உள்ளிட்ட ஆறு வகைப்பணிகள் நடக்கின்றன. அதனால், தற்போது ஏற்பட்டுள்ள நெரிசல், குழிகள் தோண்டப்பட்ட சாலைகளால் ஏற்பட்ட பாதிப்பு தற்காலிகமானதே. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் நிறைவு பெற்றதும், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பழம்பெரும் பாரம்பரிய மதுரை நகரம் பாதுகாக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, பெரியார் பஸ் நிலையத்தில் பாதாள அறை பார்க்கிங் வசதி அமைக்கப்படுகிறது. இங்கு 420 கார்கள், 4 ஆயிரம் இரு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், மாரட் வீதிகள் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு ஷாப்பிங் செல்லலாம். இந்தக் கடைகளுக்கு நள்ளிரவு சரக்குகளைக் கொண்டு வர வாகனங்கள் அனுமதிக்கப்படும். பகல் நேரத்தில் சரக்கு வாகனங்களுக்கும், பொதுமக்கள் வாகனங்களுக்கும் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளோம். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வந்து செல்வதற்காகவும் பேட்டரி கார்களையும் அறிமுகம் செய்யத் திட்டமும் உள்ளது.
மேலை நாடுகளில் மக்கள், மதுரை போன்ற பாரம்பரிய நகரங்கள் அழகை மக்கள் ரசிக்கவும், ஷாப்பிங் செல்லவும் வாகனப் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல், மீனாட்சியம்மன் கோயில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், சுற்றிப்பார்க்க வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக கோயில் அருகே பழைய காய்கறி மார்க்கெட் பகுதியில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கப்படுகிறது. இந்த பார்க்கிங்கில், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட சாலை வழியாக வந்து வாகனங்களை நிறுத்திவிட்டு தரிசனம் செய்துவிட்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள், பழமையான கட்டிடங்களை இடிக்காமல் பாதுகாக்கவும், அதை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்களை அரசு பார்வைக்கு பரிசீலனைக்கு அனுப்ப உள்ளோம். மாநகராட்சியின் இந்தத் திட்டம் எந்தத் தடையும் இல்லாமல் நடைமுறைக்கு வந்தால் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பாரம்பரிய மதுரை நகரம், அடுத்த தலைமுறையும் கண்டு ரசிக்க பாதுகாக்க முடியும்.
இவ்வாறு மாநகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT