Published : 26 Feb 2020 08:06 PM
Last Updated : 26 Feb 2020 08:06 PM

டெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வி: மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்: ரஜினி பேட்டி

டெல்லி கலவரம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறையின் தோல்வி. மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படும் என்று ரஜினி பேட்டி அளித்தார்.

சென்னை போயஸ் இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “சிஏஏ சட்டத்தில் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்பட்டால் நான் முதல் ஆளாக நிற்பேன் என்று சொன்னேன். அதைத்தான் இப்போது சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு ரஜினி அளித்த பதில்:

டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு கலவரம் ஏற்பட்டு ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனரே?

டெல்லியில் ஏற்பட்ட கலவரம், வன்முறைக்கு முழுக்க முழுக்கக் காரணம் உளவுத்துறையின் தோல்விதான். இந்த விஷயத்தில் மத்திய அரசை நான் கடுமையாக கண்டிக்கிறேன். ட்ரம்ப் இங்கு வந்திருக்கும்போது பாதுகாப்பு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். உளவுத்துறை சரியாகச் செயல்படவில்லை. அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்கவேண்டும். இனிமேலாவது அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உளவுத்துறையின் தோல்வி என்று சொல்கிறீர்கள். அது மத்திய அரசின் கையில்தானே உள்ளது?

உளவுத்துறையின் தோல்வி என்றால் அது உள்துறை அமைச்சகத்தின் தோல்விதான்.

சிஏஏவை வைத்து அரசியல் செய்கிறார்கள். பாஜக தலைவர் கபில் ஷர்மா வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார். டெல்லி தேர்தலிலும் மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யப்பட்டது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வன்மையாக இதைக் கண்டிக்கிறேன். சிலபேர், சில கட்சிகள் மதத்தை வைத்து இதுபோன்று தூண்டுதல் வேலைகளைச் செய்கின்றனர். இது நல்ல போக்கு அல்ல. இதை இரும்புக்கரம் கொண்டு மத்திய அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்க்காலத்தில் பெரிய சிக்கலாகிவிடும்.

டெல்லியில் கோலி மாரோ என்று வன்முறையைத் தூண்டும் விதத்தில் பாஜகவின் தலைவர்கள் பேசினார்கள் என்று கூறப்படுகிறதே?

எங்கோ யாரோ சிலர் பேசுவதைப் பொதுமைப்படுத்தக் கூடாது. தயவுசெய்து நீங்கள் எது நியாயம், எது உண்மை என்று எழுதுங்கள். உங்களை கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். நமக்கு ஒற்றுமைதான் முக்கியம். ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் சிஏஏ சட்டம் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டு, உச்ச நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இவ்வளவுக்குப் பிறகு அவர்கள் பின் வாங்குவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. இதுதான் உண்மை. இதை நான் சொன்னால் உடனே என்னை பாஜக ஆள், பாஜகவை ஆதரிக்கிறார், பாஜக பின்னாடி உள்ளது என்று சொல்வது, பத்திரிகைகளில் எழுதுவது, மூத்த பத்திரிகையாளர்கள் என்னை பாஜக ஆள் என்று விமர்சிப்பது எல்லாம் வேதனையாக இருக்கிறது. நான் என்ன உண்மையோ அதைச் சொல்கிறேன் அவ்வளவுதான்.

இத்தகைய கலவரங்களில் இஸ்லாமியர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்கிறார்களே. அதுகுறித்து?

ஆரம்பத்திலேயே அதைக் கிள்ளி எறிய வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு இரும்புக்கரம் கொண்டு வன்முறையாளர்களை அடக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்துகிறார்களே உங்கள் நிலை என்ன?

தமிழ்நாட்டில் அப்படி நடந்தால் நான் இஸ்லாமியர்களுக்குத் துணை நிற்பேன்.

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி இஸ்லாமியர்களுக்கு எதிரானது பெருவாரியான மக்களைப் பாதிக்கும்போது உங்கள் நிலைப்பாடு என்ன?
என்ஆர்சி பற்றி அவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இன்னும் அதை அவர்கள் இம்ப்ளீமென்ட் பண்ணவில்லை. நான் சொல்வது வன்முறை. அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மிக மோசமாக போய்க்கொண்டு இருக்கிறது.

போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கச் சொல்கிறீர்களா?

போராட்டத்தைச் சொல்லவில்லை. வன்முறையைச் சொல்கிறேன். போராட்டம் அது அமைதியாக நடத்தலாம். ஆனால் வன்முறை அது கூடவே கூடாது. நாடு அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x