Last Updated : 26 Feb, 2020 07:17 PM

 

Published : 26 Feb 2020 07:17 PM
Last Updated : 26 Feb 2020 07:17 PM

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நிதி ஒதுக்கியும் திட்டப்பணிகளில் சுணக்கம்: கண்காணிப்புக் குழு கூட்டத்தில் திமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் அதிருப்தி

திருநெல்வேலி

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கியும் அவை நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து திமுக எம்.பி., எம்எல்ஏக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம் (திமுக), தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ்குமார் (திமுக), சட்டப் பேரவை உறுப்பினர்கள் பூங்கோதை ஆலடி அருணா (திமுக), டிபிஎம் மைதீன்கான் (திமுக), முகமது அபுபக்கர் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), ஏஎல்எஸ் லட்சுமணன் (திமுக), திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மகளிர் திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோனி, மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள ஊரக வேலை உறுதி திட்டம், ஊரக வாழ்வாதார இயக்கம், கிராம சாலைகள் திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய சுகாதார திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது மக்களவை மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு மாவட்ட ஆட்சியரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பதில் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏக்களும், திமுக எம்.பிக்களும் மட்டுமே பங்கேற்றிருந்த நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2018 ல் பெறப்பட்ட ரூ.18 கோடியில் ரூ.15.5 கோடியும், 2019-ல் பெறப்பட்ட ரூ.19.96 கோடியில் ரூ.13 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா, கடந்த 2 ஆண்டுகளாகவே இத் திட்டத்துக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைந்துவரும் நிலையில் இங்கு ஒதுக்கப்பட்ட தொகையை சரிவர பயன்படுத்தாமல் இருப்பது குறித்து அதிருப்தி வெளியிட்டார்.

அதற்கு பதில் அளித்த ஆட்சியர், விவசாய பணிகள் நடைபெறும்போது இந்த வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. வரும் மார்ச் மாதத்துக்குப்பின் ஆட்கள் அதிகளவில் வரும்போது பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என்று குறிப்பிட்டார்.

மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 7546 மகளிர் குழுக்கள் இருப்பதாகவும், இவ்வாண்டு 150 என்ற இலக்கை தாண்டி 225 குழுக்களை ஏற்படுத்தியிருப்பதாகவும், மகளிர் குழுக்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டுவரும் விவரங்களை மகளிர் திட்ட அலுவலர் தெரிவித்தார்.

தேசிய சுகாதாரத் திட்டப் பணிகள் குறித்த ஆய்வின்போது பல்வேறு குறைபாடுகளை எம்எல்ஏக்கள் பூங்கோதை, அபுபக்கர், ஏஎல்எஸ் லட்சுமணன் ஆகியோர் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு தாலுகா மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தியிருந்தாலும், மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவற்றுக்கு சுற்றுச்சுவர்கள் இல்லாததால் வனவிலங்குகள் உள்ளே வந்துவிடுகின்றன.

பல மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லை. திருநெல்வேலி கண்டியப்பேரியில் மருத்துவமனைக்கு ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்து ஓராண்டாகியும் பணிகள் நடைபெறவில்லை என்று தெரிவித்தனர்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் சரிவர செயல்படுத்தப்படவில்லை என்ற பலமான குற்றச்சாட்டும் கூட்டத்தில் எழுப்பப்பட்டது. இத் திட்டத்தின் பயன் யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு கிடைக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் முடிக்க வேண்டிய பணிகளை இன்னும் முடிக்கவில்லை என்று எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் தெரிவித்தனர்.

குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வின்போது, குடிநீர் திட்டப்பணிகள் முடங்கி கிடப்பதை எம்.எல்.ஏ. பூங்கோதை சுட்டிக்காட்டினார்.

கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் நிதி ஒதுக்கப்பட்ட திட்டத்தைகூட நிறைவேற்றாமல் இருக்கிறார்கள். இன்னும் ஓராண்டில் தேர்தல் வரவுள்ள நிலையில் மக்களை எப்படி நாங்கள் எதிர்கொள்வது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மானூர் கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

இத் திட்டத்துக்கா கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டிகள் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. திருநெல்வேலி மாநகரில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகளை இன்னும் மூடாமலும், சாலைகளை சீரமைக்காமலும் இருக்கிறார்கள் என்று ஏ.எல்.எஸ். லட்சுமணன் குறைபட்டுக்கொண்டார்.

குடிநீர் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் ஒப்பந்தகாரர்களிடம் காணப்படும் தேக்கத்தக்கை ஆட்சியர் தனது பதிலில் ஒப்புக்கொண்டார். பணிகளை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். திருநெல்வேலி மாநகரில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட இடங்களில், பாதாள சாக்கடை திட்டத்துக்கான பைப்லைன்களும் பதிக்கப்படுவதால் சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதாகவும் ஆட்சியர் பதில் அளித்தார்.

முதியோர் ஓய்வூதிய திட்டத்தை பாகுபாட்டுடன் செயல்படுத்துவதாகவும், தகுதியான பயனாளிகளுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் இருப்பது குறித்தும், இத் திட்டத்துக்கான நிதியை பெருமளவுக்கு குறைந்துள்ளது குறித்தும் ஞானதிரவியம் எம்.பி. பேசினார்.

சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களில் கடந்த 2016-2017-ம் ஆண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்த பலருக்கு காப்பீட்டு தொகை கிடைக்காதது குறித்து தனுஷ் குமார் கேள்வி எழுப்பினார். சம்பந்தப்பட்ட பகுதிகளில் 4 கிராமங்களில் விடுபட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் பதில் அளித்தார்.

கிராம சாலைகள் திட்டத்துக்கு முழுக்கவும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் நிலையில் இத் திட்டம் தொடர்பாக மக்களவை உறுப்பினரிடம் கருத்துகளை கேட்பதில்லை என்று ஞானதிரவியம் குறைபட்டுக்கொண்டார். திருநெல்வேலி- தென்காசி, திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலைகளின் அவல நிலையை கூட்டத்தில் பூங்கோதை, அபுபக்கர் ஆகியோர் சுட்டிக்காட்டினர். திருநெல்வேலி- தென்காசி நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக நூற்றுக்கணக்கான மரங்களை அவசர கதியில் வெட்டியதால் இப்போது பல விபத்துகள் நிகழ்ந்து வருவதையும் குறிப்பிட்டனர்.

எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகளில் முன்னேற்றம் காணப்படவில்லை. திட்டப்பணிகளை மேற்கொள்ள உரிய இடங்களை அளவீடு செய்வதில் அலுவலர்கள் மெத்தனம் காட்டுவதை ஏஎல்எஸ் லட்சுமணன் சுட்டிக்காட்டினார்.

இதுபோல் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகளுக்கு நிதி ஒதுக்கியும் பொதுப்பணித்துறை சார்பில் பணிகள் நடைபெறாமல் இருப்பதாக ஞானதிரவியம் தெரிவித்தார்.

மேலப்பாளையம் கருங்குளம் பகுதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது.

ஆனால் என்னை அழைக்காமலேயே திறந்துவிட்டனர். அரசியல் காழ்புணர்ச்சியால் இது நடைபெற்றதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று டிபிஎம் மைதீன்கான் குறிப்பிட்டார். இவ்வாறு பல்வேறு திட்ட செயல்பாடுகளில் திமுக எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டு பேசினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x