Published : 26 Feb 2020 05:57 PM
Last Updated : 26 Feb 2020 05:57 PM
கல்விக் கட்டண உயர்வுக்காகப் போராடி வந்த புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவ, மாணவியர் 20 மணி நேரத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.
பட்டமளிப்பு விழா அரங்குக்குள் கர்சீப்பைக்கூட போலீஸார் அனுமதிக்கவில்லை.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இதில் பங்கேற்றார். இதனால் பல்கலைக்கழகம் கடும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பல்கலைக்கழகம் முழுக்க மத்திய ரிசர்வ் படை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
பல்கலைக்கழகப் பட்டமளிப்பு என்றால் விழாக்கோலமாக காணப்படுவதற்கு மாறாக எங்கு பார்த்தாலும் ரிசர்வ் படை மற்றும் போலீஸார் முகங்களாகவே காணப்பட்டன. பலகட்ட சோதனைக்குப் பிறகே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் நிகழ்வை பெற்றோர் நேரில் பார்ப்பது வழக்கம். ஆனால், அவ்வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் விழா அரங்குக்கு வந்த தங்கப்பதக்கம், பிஎச்டி, எம்பில் என சாதனை படைத்த மாணவ, மாணவிகள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களின் கர்சீப்பைக்கூட போலீஸார் பறிமுதல் செய்து வைத்தனர்.
ஏற்கெனவே பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டண உயர்வுக்காக 20 நாட்களாகப் போராடி வந்த மாணவ, மாணவிகள் சுமார் 80 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்தினுள் கடைசியில் உள்ள தெற்காசிய கல்வி வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அவ்வளாகத்தைச் சுற்றி ரிசர்வ் படை, போலீஸார்ஆகியோர் கூட்டுப் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
குடியரசு துணைத் தலைவர் புறப்பட்டுச் சென்று பட்டமளிப்பு நிகழ்வுகள் முடிவடைந்த சுமார் 20 மணிநேரத்துக்குப் பிறகு அடைத்து வைக்கப்பட்ட மாணவ, மாணவிகள் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கிருந்து பேரணியாக வந்து மீண்டும் நிர்வாக அலுவலகத்துக்கு வந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT