Published : 26 Feb 2020 04:33 PM
Last Updated : 26 Feb 2020 04:33 PM
"தமிழக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் ஸ்டாலின் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?" என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் சவால் விடுத்துப் பேசினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதியிலுள்ள அலங்காநல்லூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே மாணிக்கம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக அரசு ஒரு நாள் கூட தாங்காது என்று நாக்கில் நரம்பு இல்லாமல் எதிர்க்கட்சிகள் பேசின. ஆனால் இன்றைக்கு மூன்று ஆண்டுகளைக் கடந்து நான்காம் ஆண்டாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்து வரும் 2021 தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் ஒரு பொற்கால ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதல்வர் இருந்து வருகிறார்
மதுரைக்கு வந்த ஸ்டாலின் அதிமுகவின் கதையை நாங்கள் முடிப்போம் என்று கூறினார். உங்கள் தந்தை கருணாநிதியாலேயே எங்கள் கதையை முடிக்கவில்லை.
நாங்கள் விஸ்வரூபம் எடுத்தால் உங்களால் தாங்க முடியாது. தேர்தலில் நீங்கள் ஏமாற்றம் தான் அடைவீர்கள். உண்மையில், திமுகவின் கதை முடிந்துவிட்டது இனிமேல் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது
எம்ஜிஆர் மறைந்த பிறகு அதிமுக அழியப் போகிறது என்று கருணாநிதி நினைத்தார். ஆனால் ஜெயலலிதா இந்த இயக்கத்தைக் காப்பாற்றி தன் உழைப்பால் மூன்றாவது பெரிய இயக்கமாக உருவாக்கினார். தற்பொழுது ஜெயலலிதா இல்லையே, இனிமே எல்லாம் நாம் தான். கோட்டையை ஆளப் போகிறோம் என்றெல்லாம் ஸ்டாலின் தொண்டர்களிடம் கூறினார். கடைசியில் அதில் தோல்வியைத் தான் பெற்றார்.
ஏனென்றால் ஜெயலலிதாவின் ஆத்மா எங்களை வழிநடத்தி வருகிறது இந்த இயக்கத்தையும் ஆட்சியையும் ஸ்டாலினால் தொட்டுக்கூட பார்க்க முடியாது.
நிதிநிலை அறிக்கையில் செலவினங்களைக் கட்டுப்படுத்தி மக்களுக்குத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் 4.5 லட்சம் கோடி கடன் உள்ளது என்று ஒப்பாரி பாடுகின்றன.
கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்கும் பொழுது பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.6,000 கோடியை ஜெயலலிதா ஒதுக்கினார். தற்பொழுது இந்த நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.34,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்றாண்டுகளில் அனைத்து இடங்களிலும் சாலை மார்க்கமாக அதிக தூரம் சென்று மக்களை சந்தித்து கோடிக்கணக்கான மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கி ஒரு கின்னஸ் சாதனையை முதல்வர் படைத்துள்ளார்.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அந்த மை ஈரம் காய்வதற்குள் அரசாணைகளை வெளியிட்டவர் முதல்வர்.
ஆகவே உங்களுக்காகவே உழைத்து வரும் இந்த அரசிற்கு நீங்கள் என்றைக்கும் ஆதரவாக இருக்க வேண்டும். அதைவிடுத்து அரசை தொடர்ந்து குறை கூறினால் என்னுடன் நேருக்கு நேர் விவாதத்துக்கு வரத் தயாரா? என்று அவர் பேசினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT